பக்கம்:நித்திலவல்லி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நித்திலவல்லி / முதல் பாகம்


“என்னசொல்கிறீர்கள் ஐயா? நான் மதுரை மாநகருக்குப் புறப்படுவதற்கும் தாமரைப் பூக்கள் பறிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?”

“சம்பந்தம் இல்லாமலா சொல்கிறேன்? சம்பந்தம் இருப்பதால்தான் தாமதமாகிறது. ஆவணித் திரு அவிட்ட நாளில் இருந்தவளமுடையாருக்கும், அந்தரவானத் தெம் பெருமானுக்கும் ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களை அர்ச்சிப்பதாக என் மகள் வேண்டிக்கொண்டிருக்கிறாள். இரண்டு வண்டிகள் நிறையத் தாமரை மலர்கள் பறித்து நிரப்பியாக வேண்டும். மற்றொரு வண்டியில் ஆட்கள் ஏறிக்கொள்ளலாம்.”

“ஏதேது? நானறிந்த வரையில் கணக்கிட்டுப் பார்த்தால் கூட இந்த வட்டாரத்தில் உங்கள் மகள் வேண்டிக் கொள்ளாத தெய்வங்களே மீதமிருக்க முடியாது போலிருக்கிறதே?” என்று அவரிடம் அவன் கேட்ட ஒலி அடங்கு முன்பாகவே,

“இந்த வேண்டுதல்கூடப் போதாமல் இப்போது இன்னொரு புதிய வேண்டுதலையும் எல்லாத் தெய்வங்களிடமும் செய்து கொள்ள வேண்டிய அவசியம் வந்திருக்கிறதென்று அவரிடம் சொல்லுங்கள் அப்பா!” என்று அவனுக்குப் பதில் சொல்வதுபோல் தன்தந்தையிடம் கூறியபடி அப்போது அவளுடைய அந்த முழு மதியே அங்கு உதயமாயிற்று. உடனே காராளர் சிரித்துக் கொண்டே சொன்னார்:-

“பார்த்தீர்களா? பார்த்தீர்களா? திருக்கானப்பேர்க் காரர்களுக்கு நாங்கள் சாதுரியப் பேச்சில் ஒரு சிறிதும் இளைத்தவர்கள் இல்லை என்று என் பெண் நிரூபிக்கிறாள்.”

“இந்த நாட்டில் இன்று நிரூபிக்கப்பட வேண்டிய சாதுரியங்கள் வெறும் பேச்சில் இல்லை. அது விளங்காமல் தான் நாம் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறோம். களப் பிரர்களிடம் நிரூபிக்கப்பட வேண்டிய சாதுரியங்கள் வாள் முனைகளில்தான் இருக்கிறது. வெறும் வார்த்தைகளில் இல்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/43&oldid=715134" இலிருந்து மீள்விக்கப்பட்டது