பக்கம்:நித்திலவல்லி.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

451


பொறுப்பில் வளர்ந்தும் ஏன் இப்படி ஒரு பொறுப்பும் அறியாத விட்டேற்றியாகத் தலையெடுத்திருக்கிறான்?”

“மருதன் இளநாக நிகமத்தார் குதிரைகளை வளர்ப்பதிலும், பழக்குவதிலும், தேர்ச்சி பெற்றவர். மனிதர்களைப் பழக்குவதிலும், வளர்ப்பதிலும் அவர் திறமை எவ்வளவு என்பதற்கு நம் பெருஞ்சித்திரனே சான்று!”

கொல்லனின் இந்த மறுமொழியைக் கேட்டு இளையநம்பிக்குச் சிரிப்பு வந்தது. இரும்புப் பட்டறையில் பொன் இழை போன்ற நகைச்சுவையாக, முதன் முதலாக இப்போதுதான் அவனிடமிருந்து கேட்டான் இளையநம்பி. பேசிக்கொண்டே இருவரும் மாளிகையின் அலங்கார மண்டபத்தருகே சென்றனர். அங்கே பேரொளியாக மின்னும் தீபாலங்காரங்களிடையே, விளக்குகளுடன் பகை செய்வது போற் சுடர் மின்னுகிற வெண்முத்துகளைக் கொட்டிக் குவித்து ஒவ்வொன்றாகத் தேர்ந்து பட்டு நூலில் கோத்து ஆரமாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை.

“என்ன? முத்துமாலை உருவாகிக் கொண்டிருக்கிறாற் போலிருக்கிறதே? நாங்கள் எல்லாம் வாள் முனையைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கே இரத்தினமாலையின் கையிலோ முத்துமாலை கோர்க்கப்படுகிறது...” என்று கூறியபடியே அருகில் வந்த இளையநம்பியை, ஒன்றும் மறுமொழி கூறாமல் அமைதியாக ஏறிட்டுப் பார்த்தாள் இரத்தினமாலை. சில கணங்கள்.அந்த அமைதி நீடித்தது. பின்பு நிதானமாக அவனிடம் இந்த மறுமொழியைக் கூறினாள்.

“அரசகுமாரர்கள் வாள் முனையைக் கூராக்குவார்கள். போர் முனையில் வெற்றி பெறுவார்கள்! அப்படி வெற்றி பெற்ற பின், அவர்களை மணக்கும் உரிமையுள்ள நற்குடியிற் பிறந்த பெண்ணழகிகள், அந்த அரசகுமாரரை மாலை சூடி மணக்க ஓடோடி வருவார்கள். அப்படி மணக்கும் வேளையில், அந்தப் பாக்கியத்தைப் பெற்ற பெண்ணரசிக்கு அந்தப் பாக்கியத்தைப் பெற முடியாத என் போன்ற பேதைகள், இப்படி அன்பளிப்பாக எதையேனும் தொடுத்தோ, சூடியோ கொடுக்கத்தான் முடியும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/449&oldid=946672" இலிருந்து மீள்விக்கப்பட்டது