பக்கம்:நித்திலவல்லி.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


கொற்றவைக் கோயிலுக்கு நெய் விளக்கு வேண்டுதல், இருந்த வளமுடையாருக்கு ஆயிரத்தெட்டுத் தாமரை மலர் அர்ச்சனை, ஆகியவை போதாதென்று இப்போது தாய் தந்தையுடன் தீர்த்த யாத்திரை வேறு சென்று விட்டு வந்திருக்கிறாய். இவ்வளவு புண்ணியப் பயன்களைப் படைகள் போல் ஒன்று சேர்த்துத் திரட்டி வைத்துக் கொண்டிருக்கிற நீ வெற்றி பெறாமல், வேறு யார் வெற்றி பெறப் போகிறார்கள் செல்வப்பூங்கோதை? உன் அன்புக்குப் புண்ணியப் பயன் இருக்கும் போது நீ பயப்படுவானேன்? இங்கிதமான குரலில் கடுமையான வார்த்தையைச் சொன்னாலும், இனிமையாகத்தான் இருக்கும். அதுபோல் பிரியத்திற்குரிய நீ என்னைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கிறாய். ஆனால், இன்று இந்த விநாடியில் இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, வேறு ஒருவருக்கும் நான் கடுங்கோன் ஆகிவிட்டேன். என்னை இத்தனை காலம் இந்த மதுரை மாநகரில் மறைந்திருக்க இடம் அளித்து அன்போடு பேணி உபசரித்துக் கண்ணை இமை காப்பது போல் காத்த ஒருவருக்கு உண்மையிலேயே நான் கடுங்கோனாக நேர்ந்து விட்டது. இங்கே நான் கடுங்கோனாக நேர்ந்ததே உனக்குக் கடுங் கோனாகக் கூடாது என்பதனால்தான். இதை நீ இப்போது விளங்கிக் கொள்ள இயலாவிடினும், எப்போதாவது நானே உன்னிடம் விளக்கிச் சொல்லுவேன். உன் வெற்றியில், இங்கே என்னருகிலுள்ள இன்னொருவருடைய தியாகம் அடங்கப் போகிறது.

நான் உன்னை நினைக்கவே இல்லை என்று நீ என் மேல் குற்றம் சுமத்தும் போது எனக்கு, இளமையில் திருக்கானப்பேரில் நான் கல்வி கற்ற காலத்து நிகழ்ச்சி ஒன்று நினைவு வருகிறது பெண்ணே! என்னோடு ஒரு சாலை மாணவனாகக் கற்ற இளைஞன் ஒருவன், தான் காதலித்த பெண்ணை அடையமுடியாத ஏமாற்றத்தில் பித்துப் பிடித்து மடலேறும்[1] நிலைக்குப் போய் எக்காலமும் அவள்



  1. தான் காதலித்த பெண்ணை அடைய வேண்டிக் கூரிய பனை மடலாற் செய்த குதிரையில் ஏறி, ஓர் இளைஞன் தன்னையே கொடுமைப் படுத்திக் கொள்ளுதல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/452&oldid=946676" இலிருந்து மீள்விக்கப்பட்டது