பக்கம்:நித்திலவல்லி.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


கொண்டு போக வேண்டும் என்று எதிர்பார்த்திராமல் அவளே புறப்பட்டிருந்தாள். வழியில் கொற்றவைக் கோயிலை, வலம் வந்து வணங்கிச் செல்லவும் நேரம் இருந்தது. அந்த வழிபாட்டையும் குறைவின்றி நிறைவேற்றிக் கொண்டு, அப்புறம் ஆலமரத்தடிக்குச் சென்றாள் அவள்.

அங்கே அவள் சென்ற போது, உள்ளே அமர்ந்து கொண்டிராமல் ஆலமரத்தின் விழுதுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக நடந்து உலவிக் கொண்டிருந்தார் பெரியவர். அவளைப் பார்த்ததும், அவரருகே மரத்தடியில் நின்றிருந்த ஆபத்துதவிகள் இன்னும் தொலைவாக விலகிச் சென்று நின்று கொண்டனர்.

“வா, அம்மா! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் சில நாழிகைகளில் நான் கோநகரை நோக்கிப் புறப்பட வேண்டும்” என்றுதான் கூறி வரவேற்றாரே ஒழிய, அவள் கைக்கலசத்தில் இருந்த தினை மாவையோ குவளையில் இருந்த தேனையோ அவர் கவனித்ததாகவே தெரியவில்லை.

“ஐயா தேனும், தினைமாவும் கொண்டு வரச் சொன்னீர்களே! நானே காலையிலிருந்து மா இடித்துப் பிசைந்து புதுத்தேன் பிழிந்து கொண்டு வந்திருக்கிறேன்” என்று அவள் கூறினாள்; அவருக்கு அது மறந்து போயிற்றா, அல்லது அதைவிடப் பெரிய வேறு ஏதாவது நினைவு அவரைப் பற்றி விட்டதா என்று புரிந்து கொள்ள முடியாமல் மருண்டாள் அவள். அவரோ ஒரு சிறிதும் தயங்காமல், பசுமைப் பாய் பரப்பியது போன்ற அந்தப் புல் தரையில் அப்படியே அமர்ந்து, கீழே உதிர்ந்திருந்த பழுத்த ஆலிலை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு பிச்சைப் பாத்திரத்தை நீட்டும் ஒரு துறவியைப் போல், அதை அவள் முன் நீட்டினார்.

உடனே அவள் சிரித்துக் கொண்டே, இரண்டு உருண்டைத் தினை மாவை அந்த ஆலிலையில் இட்டுக் குவளையிலிருந்த சிறிது கொம்புத் தேனையும் ஊற்றினாள். அவ்வளவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/466&oldid=946695" இலிருந்து மீள்விக்கப்பட்டது