68
நித்திலவல்லி / முதல் பாகம்
நீராடப் போவார்களாம். கடைசியிற் களப்பிரர்கள் கோட்டையையும் அரண்மனையையும் கைப்பற்றியபின், அந்தப்புர மகளிரும், பாண்டியர் உரிமை மகளிரும் இந்த வழியாகத்தான் தப்ப முடிந்தது என்று கூடச் சொல்வார்கள்...”
“இந்த வழி இருப்பதை நம்மவர்கள் தவிர வேறு யாராவது அறிவார்களா? இது நேரே திருமருத முன் துறைக்குத்தான் போகிறதா அல்லது வேறு எங்கேனும் இதிலிருந்து வழிகள் பிரிகின்றனவா?”
“நம்மவர்கள் மட்டுமே பயன்படுத்தும் இரகசிய வழியாக இதை வைத்திருக்கிறோம். இங்கிருந்து திருமருத முன் துறைக்கு நெடுந்தூரம் இருப்பதாலும், நடுவே ஏதேனும் அபாயம் வந்தாலும், உடனே தப்ப வழி வேண்டும் என்பதாலும், இடையில் நகரில் புகழ்பெற்ற கணிகையர் வீதி குறுக்கிடும் இடத்தில் அங்குள்ள ஓர் நம்பிக்கையான கணிகையின் மாளிகையோடு ஒரு வாயில் இணைத்திருக்கிறோம்...”
“இப்போது நாம் எங்கே புறப்பட்டுப் போகிறோம் அழகன் பெருமாள்?”
“உப வனத்துக்குத்தான்! அங்கே எல்லாச் செய்திகளையும் உங்களுக்குக் கூற முடிந்தவர்களாக நம்மவர்களில் நாலைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் பெரியவர் இங்கே சாதிக்க வேண்டிய மிகப் பெரிய அரச தந்திரக் காரியங்கள் எல்லாமே சாதிக்கப்படுகின்றன.”
அதற்கு மேலும் அவனிடம் பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல், மேற்கல்லின் பக்கங்கள் உடலில் உராயாமல் கவனமாய் படிகளில் குதிப்பது போல், இறங்கி உள்ளே நுழைந்தான் இளையநம்பி. அவனைத் தொடர்ந்து அழகன் பெருமாளும் கீழே குதித்து இறங்கிக் கைகளை மேலே உயர்த்திப் புரட்டிய கல்லை உள்ளிருந்தபடியே மேற்பக்கம் தாங்கி மெல்ல மெல்ல நகர்த்தி வழியைப் பழையபடியே மூடினான். உட்புறம் இருள் சூழ்ந்தது. அழகன் பெருமாள் இளையநம்பியின் வலது கையைத் தன் கையோடு கோர்த்துக்