பக்கம்:நித்திலவல்லி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

69


கொண்டு கீழே தடுமாறாமல் படி இறங்கி நிலவறையில் விரைந்தான்.

“இந்த இருள் உங்களுக்குப் பழக்கமாயிராது. கவனமாக நடந்து வர வேண்டும் நீங்கள்?” என்று தன்னை எச்சரித்த அழகன் பெருமாளிடம் இளையநம்பி “என்னைப் பற்றிக் கவலைப்படாதே! ஒளியைத் தேடிக் கண்டுபிடிக்கிற வரை ஒவ்வொரு வீரனும் இருளில் தான் கால் சலிக்க நடக்க வேண்டியிருக்கும். இருளுக்குத் தயங்கினால் எதுவும் நடக்காது” என்று சிரித்துக் கொண்டே மறுமொழி கூறினான்.


9. நம்பிக்கையின் மறுபுறங்கள்

செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் தங்களிடம் இளைய நம்பியும், யானைப்பாகன் அந்துவனும் விடை பெற்றுச் சென்ற பின்பும் நெடுநேரம் அவர்களைப் பற்றிய நினைவுகளையும் கவலைகளையும் தவிர்க்க முடியாமல் இருந்தனர்.

‘இந்த விநாடியில் யானைப் பாகன் அந்துவனோடு அவர் எங்கே போயிருப்பார்? எவ்வளவு தூரம் போயிருப்பார்? யார் யாரை அவர் எதிர்கொண்டு சந்திக்க நேரிடும்’ என்று நினைவை இளைய நம்பியின் பின்னே அலையவிட்டபடி உடலால் மட்டும் தன் தாயின் பின்னே இயங்கிக் கொண்டிருந்தாள் செல்வப் பூங்கோதை. தாய் எதையோ கேட்டால் அதற்குத் தொடர்பில்லாமல், வேறு எதையோ அவளிடம் மறுமொழியாகச் சொன்னாள் இவள்.

‘பயப்படாதே! உனக்கு அபயம்’ என்பதுபோல் வண்டியில் நிறைந்திருந்த தாமரைப் பூக்களுக்கு நடுவே தென்பட்ட அந்தப் பொன்நிற உள்ளங்கையைச் செல்வப் பூங்கோதையால் மறக்கவே முடியவில்லை. அந்தக் கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/70&oldid=715243" இலிருந்து மீள்விக்கப்பட்டது