பக்கம்:நித்திலவல்லி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

97


வெள்ளியம்பலத்தில் காத்துக் கிடந்தும், நிலவறையில் நடந்தும் களைத்திருக்கிறீர்கள். முதலில் நீராடிப் பசியாறுங்கள்” - என்றான் அவன்.

இளையநம்பி அந்த மண்டபத்தின் பின் பகுதிக்குச் சென்று வையைப் படித்துறையில் இறங்கியபோது மண்டபப் புறங்கடையில் இருந்த தாழம்புதரை ஒட்டிச் சிறிய படகு ஒன்று கட்டப்பட்டிருந்ததைக் கண்டான்.

அந்த அதிகாலை வேளையில் வையை மிக அழகாகத் தோன்றினாள். நீர் பாயும் ஓசை நல்லகுடிப் பிறப்புள்ள பெண்ஒருத்தி அடக்கம் மீறாமல் நாணி நகைப்பதுபோல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெடுந்துாரத்திற்கு நெடுந்தூரம் மறு கரைவரை தெரிந்த அந்த நீர்ப்பரப்பைக் காண்பதில் அளவற்ற ஆனந்தத்தை உணர முடிந்தது. மதுரை மாநகரில் புகழ்பெற்ற திருமருத முன்துறை அருகில் இருந்ததாலோ என்னவோ அந்தப் பகுதியின் வையைக் கரை சொல்ல முடியாத வசீகரமும் வனப்பும் நிறைந்து காட்சியளித்தது.

‘பாண்டிய மரபின் கீர்த்திமிக்க பல அரசர்களின் காலத்தை எல்லாம் இதன் கரைகள் கண்டிருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நின்று மணக்கும் தமிழ்ப் புலவர்களின் சங்கங்களை இதன் கரைகள் பெற்றிருந்தன. ஓர் இணையற்ற நாகரிகம் செழித்து வளர்ந்ததற்கு இந்த நதியும் ஒரு சாட்சி’- என்று நெஞ்சுருக நினைத்த போது அந்த நாகரிகத்தை இன்று அந்நியர்களாகிய களப்பிரர்கள் அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்னும் நிகழ்கால உண்மையும் சேர்ந்தே இளைய நம்பிக்கு நினைவு வந்தது. அந்த விநாடிகளில் மயிர்க் கால்கள் குத்திட்டு நிற்கப் பாதாதி கேச பரியந்தம் ஒரு புனிதமான சிலிர்ப்பை உணர்ந்தான் அவன். நெஞ்சில் மூலநெருப்பாக ஏதோ ஒரு கனல் சூடேறினாற் போலிருந்தது.

தனி மண் மட்டுமே ஒரு நாகரிகத்தையோ வரலாற்றையோ படைத்துவிட முடியாது. அந்த மண்ணில் ஒடும் நதியும் விளையும் பொருள்களும் அந்த மண்ணையும் நீரையும் கலந்து வளரும் பயிர்களும், அவற்றால் உயிர் வாழும் மக்களும் சேர்ந்தே ஒரு நாகரிகத்தைப் படைக்கிறார்கள்.

நி.வ - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/98&oldid=715264" இலிருந்து மீள்விக்கப்பட்டது