பக்கம்:நித்திலவல்லி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

நித்திலவல்லி / முதல் பாகம்



புறத்துச் சிற்றூர்களிலும் தங்கள் காரியங்களுக்குப் பயன்படும் நண்பர்களைப் பெருக்கியிருந்தார்கள் என்பதையும் கூட இளையநம்பி அறிந்து கொண்டான். கோநகருக்கும் பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையும் ஆசியும் பெற்ற சிலர் இப்படி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கழற்சிங்கன் சொன்னான்.

அழகன் பெருமாள் நீராடி விட்டு வந்ததும், பொதுவாக இளையநம்பிக்கு அவன் ஓர் எச்சரிக்கை செய்தான்:-

“ஐயா! வழக்கமாக இந்த உப வனப் பகுதிக்குக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படையினரோ, பிறரோ சோதனைக்கு வருவதில்லை. எதற்கும் புதியவராகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் பாண்டிய நாட்டின் தொலை தூரத்து ஊரிலிருந்து வரும் ஒருவருடைய சாயல் உங்களிடம் தென்படுகிறது. யாராவது ஐயப்பாட்டோடு வினவினால், ‘நான் அழகன் பெருமாள் மாறனின் உறவினன். அவிட்ட நாள் விழாப் பார்க்க வந்தேன்’ என்று சொல்லிக் கொள்ளுவது உங்களுக்கு நல்லது.”

“அப்படியே சொல்லிக் கொள்வேன் இந்தச் சூழ்நிலை பழகுகிற வரை சில நாட்களுக்கு அப்படிக் கூறிக் கொள்ள வேண்டியது அவசியம்தான் அழகன் பெருமாள்” என்று இளையநம்பியும் அவன் கூறியதில் இருந்த நல்லெண்ணத்தை ஒப்புக் கொண்டு இணங்கினான். நீராடச் செல்லுவதற்கு முன் இளையநம்பி அழகன் பெருமாளிடம் கேட்டான்:-

“கொற்கைத் துறைமுகத்துக்கு வரவேண்டிய சோனகர் நாட்டுக் குதிரைக் கப்பல், என்று கரையடையப் போகிறது? கப்பலில் இருந்து குதிரைகளைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்? எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள்?”

அழகன்பெருமாள் இதற்கு உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் பின், “நீங்களும் நீராடிப் பசியாறிய பின் அவற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யலாம். இரவெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/97&oldid=945261" இலிருந்து மீள்விக்கப்பட்டது