பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 நினைவுக் குமிழிகள்-2

சங்க காலத்திலேயே இத்திருப்பதி முருகன் உகந்த தலமாக இருந்தது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அலைவாயில் முருகன் ஆறு திருமுகங்களுடனும் பன்னிரண்டு திருக்கைகளுடனும் அடியார்க்குச் சேவை சாதிக்கின்றான். முருகப் பெருமானின் ஆறுமுகங்களின் அருட்செயல்களும் அம்முகங்கட்கு ஏற்றவாறு பன்னிரண்டு திருக்கைகளின் அருட் செயல்களும் திருமுருகாற்றுப் படை விரித்துப் பேசும். அடியார்களை ஆட்கொள்ளும்பொருட்டு அவன் வான வீதியில் வருங்காட்சி,

அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர் எழுந்து இசைப்ப வாள்வளை ஞால உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்பு ஆறாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்போ" (அந்தரம்-வானம்; பல்லியம்-இசைக்கருவிகள்; கறங்க-முழங்க; காழ்-வயிரம்; வயிர்-ஊதுகொம்பு; வளை-சங்கு; ஞால-ஒலிக்க உரம்-வலிமை; உரும் இடி இடியோசை ஆறாக-வழியாக, முன்னி-எண்ணி; சேறல்-செல்லுதல்.) என்று அழகாகக் காட்டப் பெறுகின்றது. இந்த முருகனைச் சேவிப்பதற்குமுன் கடலில் நீராடினோம்.

நாங்கள் சென்ற அக்காலத்தில் திருக்கோயிலினருகில் தலப்பயணிகள் தங்குவதற்கு விடுதிகள் கட்டப் பெறவில்லை. இதனால் நீராட வேண்டிய நேரத்தில் நீராட முடியவில்லை. கடலில் நீராடிய பிறகு அருகிலுள்ள நாழிக் கிணறுகளில் நீராடினோம். இந்த அற்புதம் எங்குக் காண முடியாதது.

3. திருமுருகு-அடி 119.125