பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OO நினைவு அலைகள் அனைத்திந்திய காங்கிரசின் தொடக்க காலம், அரசியல் தன்னாட்சி கோரும் காலமாக இல்லை. இது குறையல்ல. பெரும் பரப்பை வளைத்துக் கொள்ளப் போகும் ஆலமரமும் மற்றச் செடிகளைப் போலவே, அடக்கமாக, இரண்டு இலையோடுதான் முளைக்கும். காலம் செல்லச் செல்லவே, செடியாக வளர்ந்து, மரமாகக் கிளைத்து நாலா பக்கங்களிலும் விழுதுவிட்டு, பெருமரமாகக் காட்சியளிக்கும். அனைத்து இந்திய காங்கிரசும் இப்படியே வளர்ந்தது. தோன்றிச்சில ஆண்டுகள் கழிந்த பிறகே, இயக்கம் சூடு பிடித்தது; கோரிக்கைகள் விரிந்தன. தன்னாட்சி உரிமைக்குப் போராடும் இயக்கமாக வளர்ந்து, ஒற்றுமையுடன் வீறுகொண்டது. அப்படி வீறுகொள்ளும் நிலையில், அண்ணல் காந்தியடிகளின் தலைமை தேசிய காங்கிரசிற்குக் கிடைத்தது. காந்தியடிகளின் வழி நடத்தலில் இது பொது மக்கள் இயக்கமாக மலர்ந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கு வழங்கப்படும் நாட்டு மொழிகளில் அரசியல் அறிவு வழங்கப்பட்டது. அரசியல் மேடைகளில் தாய்மொழி மணம் வீசிற்று. தாய் மொழிச் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் வெளிவரத் தொடங்கின. நாட்டுக் கல்வி மட்டும் பெற்றவர்களும், தாய்மொழி இதழ்களின் மூலம் உலகில் அரசியல் தெளிவினைப் பெறத் தொடங்கினார்கள். இந்தியாவிலுள்ள அரசுப் பதவிகளில் இந்தியர்களும் அமர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறத் தொடங்கின. அதைக் கண்ட பொதுமக்கள், தத்தம் பிள்ளைகளும் அப்பதவிகளுக்கு வரவேண்டும்; உயர்படிப்பும் பட்டங்களும் அவை கொடுக்கும் பல நிலைப் பதவிகளும் மேட்டுக் குடிகளிடமே முடங்கிவிடக் கூடாது; அவை கடைகோடியில் இருப்போர்க்கும் எட்ட வேண்டும் என எண்ணினர். போட்டியும் காழ்ப்பும் வளராதிருக்கும் பொருட்டு இந்திய ஆட்சி அணியைச் சேர்ந்த பதவிகளில் இத்தனை விழுக்காடு இந்தியர்களுக்கென்று ஒதுக்குவதைப்போல, இந்தியர்களிடையிலும் ஆதிதிராவிடர்களுக்கு இவ்வளவு, இஸ்லாமியர்களுக்கு இவ்வளவு, பார்ப்பனர்களுக்கு இவ்வளவு, மற்றவர்களுக்கு இவ்வளவு என்று ஒரு பங்கீட்டை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என்ற கருத்துகள் ஆங்காங்கே கிளம்பின. சில ஆண்டுகளில் நம் வகுப்புகளுக்கிடையில் சரியான பங்கீடு கோரும் இயக்கம் ஒன்று சென்னை மாகாணத்தில் முளைத்தது. அதன் பெயர் 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்'. அதையே 'நீதிக்கட்சி என்றும் அழைத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/142&oldid=786892" இலிருந்து மீள்விக்கப்பட்டது