பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O நினைவு அலைகள் தொப்பியும் இஸ்லாமியரின் வாழ்த்தும் தொப்பி வாங்கும் வேலை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பெரிய மசூதிக்கு எதிரில் தொப்பிக்கடைகள் இருந்தன. மூன்று நான்கு கடைகளுக்குள் நுழைந்து பார்த்தோம். குஞ்சம் வைத்த தொப்பிகளே இருந்தன. அவ்வகைத் தொப்பி எங்களுக்குப் பிடிக்கவில்லை. கடைசியாக ஒரு கடையில், குஞ்சம் இல்லாத கறுப்புத் தொப்பி இருந்தது. என் தலைக்குப் பொருத்தமாகவும் இருந்தது. அதை மடித்து வைத்துக் கொள்ளலாம். எனவே, குல்லாயொன்றை வாங்கிக் கொண்டேன். அந்தக் கடைக்காரர், ஓர் இஸ்லாமியர்; வயது முதிர்ந்தவர். நாங்கள் தேர்ந்தெடுத்த குல்லாவை நேரே பெட்டியில் வைத்துக் கொடுக்கவில்லை. கடையின் ஒரு மூலைக்குச் சென்றார்: மண்டியிட்டுத் தொழுதார்; ஒதிக்கொடுத்தார்; ஓதிய வலிமையோடு என் தலையில் வைத்து வாழ்த்தினார். பிறகு, பெட்டியில் வைத்துக் கொடுத்தார். கொடுக்கும்போது, 'கல்லூரியில் நன்றாகத் தேற வேண்டும். பெரிய பெரிய வேலைக்கு வரவேண்டும். வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு அல்லா, அருள்புரிவார் என்று மனமார வாழ்த்திக் கொடுத்தார். நானோ இந்து; அவரோ இஸ்லாமியர். அவர் தொழிலோ வாணிகம். இருப்பினும் வேறு சமயத்தவனாகிய நான் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆர்வத்தோடு, வழிபட்டு, வாழ்த்தியது எங்கள் உள்ளங்களைத் தொட்டது. அன்று, நாட்டில் படித்த கூட்டத்தாரில், பலர் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று எதிர் அணிகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள்; சொற்போர் நிகழ்த்தி, பொதுமக்களின் மனிதத்தன்மையைச் சேறாக்கிக் கொண்டிருந்தார்கள். தத்தம் உயர்விற்காகவும் பதவிக்காகவும் இரு தரப்புப் பெரியவர்களும் கசப்பைப் பயிரிட முனைந்தபோதும் சாதாரண மக்கள் அந்தச் சேற்றில் சிக்கிக் கொள்ளவில்லை. 'வாழ்வோம்; வாழ விடுவோம். வளர்வோம்; வளர்ப்போம் என்னும் நெறியைச் சாதாரண மக்கள் பின்பற்றியதற்கு இந்நிகழ்ச்சி சான்றாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/222&oldid=787016" இலிருந்து மீள்விக்கப்பட்டது