பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நினைவு அலைகள் மணி பத்தடிக்கத் தொடங்கிற்று. பத்தாவது மணி அடித்து முடியும்போது, 'நெடுமால் ஒருவர், வகுப்பிற்குள் நுழைந்தார். பொத்தானைக் கொண்டு இயக்கியதுபோல், வகுப்பு முழுவதும் எழுந்து நின்றது. பேராசிரியர் மேடை ஏறி, நாற்காலியில் அமர்ந்தார். ஆ! எவ்வளவு உயரமானவர் முகத்திலேதான் எத்தனை நம்பிக்கை! வருகைப்பட்டியல் அவருக்கு முன்னிருந்த மேசையின் மேல் இருந்தது. அதைத் திறந்தார். மாணவர்களை, அகரவரிசையில் அழைத்தார்; எழுந்து நின்று உள்ளேன் அய்யா என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னோம். வருகைப்பதிவு முடிந்ததும் பாடத்தைத் தொடங்கினார். என்ன பாடம்? ஆங்கிலத்தில், சிறு செய்யுள்கள் பாடம்; எப்படிக்கற்பித்தார்? கணிரென்ற குரலில், ஒரு செய்யுளை ஓசை நயத்தோடு படித்தார். அவர் வாயைப் பார்த்தபடியே அசையாமல் உட்கார்ந்து இருந்தோம். படிக்கும்போது அவருடைய குரலில், தக்க இடங்களில் ஏற்ற இறக்கம் வெளிப்பட்டன;துள்ளோட்டம் கேட்ட இடங்கள் இருந்தன. ஏக்கப் பெருமூச்சு விடுவதுபோல் தோன்றிய இடங்களும் இருந்தன. இரண்டாம் முறையும் அதே செய்யுளைப் படித்துக் காட்டினார். சலிப்புத் தட்டவில்லை. பிறகு.? அச்செய்யுளைப் பற்றிச் சில கேள்விகள் கேட்டார். சிலர் பதில் கூறினர். பலர் கேள்வியறிவோடு நின்றனர். அச்செய்யுளின் உயிர்நாடிகளை மாணவர்களைக் கொண்டே அடையாளங்காட்டச் செய்தார். இரண்டொன்றை அவரே காட்டினார். மூன்றாம் முறையும் செய்யுளைப் படிக்க வேண்டிய மேல் கீழ் ஒலிகளோடு படித்துக் காட்டினார். அவர் படித்த முறையிலே, செய்யுளின் கருப்பொருள் விளங்கிற்று. ஆங்கிலச் செய்யுளையும் சுவைக்க முடிந்தது. பேராசிரியர் செய்யுளைப் படித்த சுவையில் வகுப்பு முழுவதும் மெய்மறந்து கிடந்தது. மொழியறிவை வளர்ப்பதைக் காட்டிலும் ஒசை நயத்தையும், சொல் நயத்தையும், பொருள் சிறப்பையும் வளர்ப்பதற்கே, செய்யுள்கள் என்பது அப்பேராசிரியர், திரு. எஸ்.ஈ.அரங்கநாதனுடைய கருத்தாகும். அவருடைய செய்யுள் வகுப்புகள் அனைத்தும் பெரிதும் இரசனை வகுப்புகளாகவே தோன்றின. பாட வகுப்பாகத் தோன்றவில்லை. தேர்வுக்கு எது முக்கியம் என்று தேடும் முயற்சியில் நாங்கள் அலைந்து கொண்டிருக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/224&oldid=787018" இலிருந்து மீள்விக்கப்பட்டது