பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. தமிழ் அய்யா கா.ரா. நமச்சிவாய முதலியார் மேனாட்டுப் பாணியில் தோற்றம் அளித்த, தமிழ் அய்யாஎவரையும் அதற்குமுன் நாங்கள் பார்த்ததில்லை. எங்கள் காலத்துத் தமிழ்ப் பண்டிதர்கள். 'ஆள்பாதி; ஆடைபாதி என்பதை உணர்ந்து இருந்தார்கள். எனவே, குடும்ப நிலை எப்படியிருந்தாலும், கல்விக்கூடங்களுக்குச் செல்லும்போது, மற்றவர்கள் சிரிக்கும் அல்லது பரிதாபப்படும் நிலையில் போக மாட்டார்கள். எனினும் நமச்சிவாயர் அளவு மிடுக்கான உடை, எங்களை வியப்பில் ஆழ்த்திற்று. எனவே, அவரைப் பற்றிப் பின்னர் விசாரித்தோம். அன்றைய மாநிலக் கல்லூரியில் சில பேராசிரியர்களே கார் வைத்திருந்தார்கள். அதிலே ஒருவர், திரு. நமச்சிவாயர். நமச்சிவாயருடைய 'காரே சிறந்த கார் என்று மற்றப் பேராசிரியர்கள் வியந்து சொல்லுவார்களாம். விலை உயர்ந்த காரும், விலையும் பராமரிப்புச் செலவும் மிகுந்த உடையும் கொண்டிருந்த நமச்சிவாயர் பேராசிரியரா? இல்லை. தமிழ்ப் பண்டிதர். அன்னியனிடம் நாடு அடிமைப்பட்டிருந்தபோது, கல்லூரிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகியவற்றிற்குப் பேராசிரியர் பதவி இல்லை; துணைப் பேராசிரியர் பதவியும் இல்லை; வெறும் பண்டிதர் பதவிகளே இருந்தன. சம்பளம், எல்லா ஆசிரியர்களிலும் மிகமிகக் குறைந்தது. மாதச் சம்பள விகிதம் ரூபாய் 85 இல் தொடர்ந்து 150 இல் முடியும். கட்டைச் சம்பளம் வாங்கியபோதும் அவர் சிறியவராகக் காட்சி அளிக்கவில்லை. தோற்றப் பொலிவிற்கு இல்லாத பணம் வேறு எதற்குப் பயன்பட்டும் நன்மை இல்லை. இப்படி எண்ணினார்போலும் நமச்சிவாயர். உழைப்பால் உயர்ந்தவர் நமச்சிவாயர் நமச்சிவாயர் பிறவிச் செல்வரா? இல்லை மிகமிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். வாழ்க்கையைச் சென்னைத் தண்டையார் பேட்டை தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தொடங்கினார். பணிபுரிந்து கொண்டே தமிழைக் கற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/227&oldid=787021" இலிருந்து மீள்விக்கப்பட்டது