பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நினைவு அலைகள் தமிழ் வகுப்பு மூன்றாவது காலப்பிரிவில், நாங்கள் தமிழ் வகுப்பிற்குச் செல்ல வேண்டும். தமிழ் வகுப்பு நடக்கும் அறை தெற்குக் கோடியில் இருந்தது. தரைமட்ட அறையில் நடந்தது. தமிழ் வகுப்பிற்குச் சென்று அமர்ந்தோம். இரண்டொரு நொடிகளில், ஒசைப் படாமல், ஆனால் கம்பீரமாக ஒரு பெரியவர் உள்ளே நுழைந்தார். அவரது தோற்றத்தைக் கண்டதும், நாங்கள் சட்டென்று எழுந்து நின்றோம். எங்களை உட்காரச் சொல்லி, பின் அவரும் நாற்காலியில் அமர்ந்தார். தலையில் தூய தலைப்பாகை; சரிகைப்பட்டை மின்னும் தலைப்பாகை. முகத்தைப் பார்த்தோம். நிறைவான தோற்றம். பரந்த நெற்றி; அதில் சந்தனப்பொட்டு, கண்களோ அமைதியைப் பொழிந்தன; கத்தரித்து விடப்பட்ட கவர்ச்சியான மீசை கவனத்தை ஈர்த்தது. உயரம் நடுத்தரத்திற்கு மேல். கழுத்திலே டை காட்சியளித்தது. அவர் மேல்நாட்டுப் பாணியில் சிறப்பாக உடை உடுத்தியிருந்தார். அவருடைய கால்சட்டையும் மேல் சொக்காயும் மடிப்புக் கலையாதிருந்தன. அன்று கண்டதைப் போலவே, என்றும் அவை கசங்காதிருக்கக் கண்டேன். அவருடைய அகநிலை கசங்கவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதைப் போன்று அவர் உடை இருந்தது. தமிழ்ப் பாடம் சொல்லத் தொடங்கினார், அப்பெரியவர். அப்போதுதான் அவர், மாநிலக் கல்லூரியின் தமிழ் அய்யா, என்று தெரிந்து கொண்டோம். அவர் பெயர் கா.ரா. நமச்சிவாய முதலியார் என்பதாகும். இதை மேல் வகுப்பு மாணவர்களிடமிருந்து பின்னர் தெரிந்து கொண்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/226&oldid=787020" இலிருந்து மீள்விக்கப்பட்டது