பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 303 'வழக்குப் பிறந்தால் நீதி பிறக்கலாம். பொது மக்களுக்கு நிதி கிடைக்க, எவராவது வழக்காட வேண்டும். நம் நாட்டில் அரசியல் உரிமைக்காக வழக்காடக் காந்தியடிகளார் இருக்கிறார். 'ஒட்டாத பல சாதிகளாகக் கிடக்கும் நம் சமுதாயம், கலப்புச் சமுதாயமாக எத்தனையோ தலைமுறைகள் பிடிக்கலாம். அதுவரை, பல வகுப்புகளுக்கும் உரிமை கேட்டு - பதவிகள் கேட்டு - வழக்காட ஈ.வெ.ரா. பெரியார் இருக்கிறார். பிந்திய வழக்கும் தேவை. 'நாடு எல்லோருக்கும் பொது உடைமை. அதன் வளமும் வளர்ச்சியும் சாதாரண மக்களுக்கும் பயன்பட வேண்டும். 'வகுப்புவாரி உரிமையை ஏற்றுக் கொள்ளாத காலத்தின் நிலை என்ன? == 'சமுதாயத்தின் பெரும்பாலோர், வெறும் கூலிகள்; விலகி நின்று, குனிந்து,கும்பிட்டுப் பல்லிளிக்கும் பாமரர்கள். தோட்டி வேலையும் வெட்டியான் வேலையும் ஆதிதிராவிடர் களுக்கு. பங்கா இழுக்கும் வேலையும் அலுவலகங்களைப் பெருக்கும் வேலையும் காவல் காக்கும் வேலையும் மறத்தமிழருக்கு; படையோச்சிய வீரப் பரம்பரைக்கு. 'ஆட்சிச் சக்கரங்களும் அலுவலகச் சாவிகளும் மேட்டுக் குடியினர்களுக்கு மட்டுமே. ஆணையிடும் இடங்கள், ஆலோசனை கூறும் அலுவல்கள், நெறிமுறை காட்டும் பொறுப்புகள், மதிப்பிற்குரிய பதவிகள், செல்வாக்குடைய இடங்கள் ஆகியவை தமிழர்களுக்கு எட்டாக் கனிகளாக இருப்பது சரியல்ல. மேற்கூறிய அரசு அலுவல்கள், பதவிகள், பொதுமக்களுக்குத் தொண்டு புரியவே. அவ்விடங்களைப் பிடித்துக் கொள்வோர், பொதுமக்களிடையே இருந்து வரும்போது பொதுமக்கள்பால் இயற்கையான பற்றும் பாசமும் கொள்ளக்கூடும். பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பணிகளில், மக்கள் படும் தொல்லைகளை மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றவர்களே பயனுள்ள வகையில் செயல்பட முடியும். 'இந்த அடிப்படை உணர்வு சரியாக இல்லாவிடில், எத்தனை மதிநுட்பம், ஊக்கம், நேர்மை உடையவர்களானாலும் அந்த அதிகாரிகளால் மக்களுக்குப் பெரும்பயன் விளையாது. 'எனவே, பட்டிக்காட்டானும் பாட்டாளி மக்களும் அரசின் பொத்தான்களை விசைகளை இயக்கும் நிலை உருவாகும்போதே சமுதாயம் முழுவதும் முன்னேறக்கூடும். இக்கோணத்திலிருந்து பார்த்தால், பெரியாரின் வழக்கும் தேவையானதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/345&oldid=787184" இலிருந்து மீள்விக்கப்பட்டது