பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. குத்துாசி குருசாமி அறிமுகம் நான் பெற்ற நட்புச் செல்வம் முன்னரே குறிப்பிட்டபடி எனக்கு நட்புச் செல்வம் நிறைய உண்டு. மூத்த மாணவர்களைக் கண்டு வியந்து விலகிப் போவதில்லை. இளையவர்கள் என்று இகழ்ந்து நான் ஒதுக்குவதும் இல்லை. இப்போது விதியிலிருந்து ஒருமுறை விலகிவிட்டேன். நான் இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கையில் என்னுடன் ஆர். சோமசுந்தரம் என்பவர் படித்து வந்தார். அவர், சர். பி. டி. இராசன் அவர்களுடைய அக்காள் மகன். ஒரு சமயம் விடுதியில் அவர் அறை எனக்கு அடுத்து இருந்தது. அவரைத் தேடி, ஒரு விடுமுறை நாளன்று, மாலைப்பொழுதில் அரும்பு மீசையும் இல்லாத, பால்வடியும் முகங்கொண்ட ஒரு சிறுவர் வந்தார். i. அவர் எலுமிச்சம் பழத்தை ஒத்த நிறத்தில் இருந்தார். சோமசுந்தரத்தின் அறை பூட்டிக் கிடந்தது. வந்த சிறுவர் என்னிடம் கேட்க, என் அறைக்குள் நுழைந்தார். நான் படுத்தபடியே, வார இதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். வந்தவரை வரவேற்கவில்லை. சட்டை செய்யாமல், படுத்தபடியே சோமு எங்குச் சென்றிருக்கிறார்; எப்போது வருவார். என்று தெரியாதென்று பதில் கூறினேன். யார் என்று கேட்கவில்லை. நான் சொன்ன தோரணையில், காத்திருக்கலாமா என்று கேட்கவும் அவருக்குத் துணிவில்லை. உடனே வெளியேறி விட்டார். அவர் உள்ளம் எவ்வளவு புண்பட்டதோ? திரு. சோமசுந்தரம் அறைக்குத் திரும்பியதும் அவரைச் சிறுவர் தேடி வந்ததைப் பற்றிச் சொன்னேன். வந்தவரின் தோற்றத்தை விவரித்தேன். 'பார்ப்பனப் பையன் போல் தோன்றிற்று' என்று சொன்னேன். சோமு வீழ்ந்து வீழ்ந்து சிரித்தார். 'பார்ப்பனப் பிள்ளையானால், தான் யார் என்பதைச் சொல்லிவிட்டே போயிருப்பார்; இவர் யாரும் அல்ல; உனக்கு ஏற்கெனவே நண்பரான திரு டி.ஜி. பாலசுப்பிரமணியத்தின் தம்பி. உயர்நிலைப்பள்ளி மாணவர். டி.ஜி. சீனிவாசன் என்று பெயர்' என்றார். திரு டி.ஜி. பாலசுப்ரமணியம், திரு மீ. பக்தவத்சலத்திற்கும் திரு பி.டி. இராசனுக்கும் மைத்துனர். பின்னர் ஒ. வி. அளகேசனுக்கும் மைத்துனர் ஆனார். என்னுள் சொல்ல முடியாத வெட்கமும் வேதனையும் பொங்கிப் போட்டியிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/352&oldid=787192" இலிருந்து மீள்விக்கப்பட்டது