பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 நினைவு அலைகள் துண்டை மேலே போட்டுக்கொண்டு வாசிக்கலாமே என்றார். கூடாது என்றார்கள் செல்வர்கள். வாதம் முற்றிற்று, பிடிவாதம் வளர்ந்தது. வாசிப்புக்கு இடையூறானது. அப்போது அவ்வூரில் இருந்த திரு. அழகிரிசாமியின் குருநாதர் பெரியார் ஈ.வெ.ரா. இடம் தூது அனுப்பினார்கள். தோழரை அடக்கச் சொன்னார்கள். பெரியார் ஈ.வெ.ரா. இதற்கு ஒப்பவில்லை. தன்மான இயக்கம் கண்ட முதல் வெற்றி வேறு வழியின்றி, வித்வான் சிவக்கொழுந்து, மேலே துண்டு போட்டுக்கொண்டு வாசிக்க இசைவு தந்தார்கள், பெரியவர்கள். பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் வெற்றி, தன்மான இயக்கத்தின் வெற்றியாகும். பார்ப்பனரல்லாத இசைக் கலைஞர்களும் மற்றவர்களைப்போல் மதிக்கப்படவேண்டும் என்பது ஈ.வெ.ராமசாமிப் பெரியார் கண்ட தன்மான இயக்கத்தின் கொள்கை விழுதுகளில் ஒன்று. வாய் திறக்க முடியாத அக்கலைஞர்களுக்காகப் போராட வீறுகொண்ட இயக்கமொன்று இருப்பதை உலகம் அறியச் செய்ய வேண்டுமே! அதற்காகவே ஈரோட்டில் நடந்த இரண்டாவது சுயமரியாதை மாநாட்டோடு, பார்ப்பனரல்லாத இசைவாணர்கள் மாநாட்டையும் பெரியார் ஏற்பாடு செய்தார். மாநாட்டிற்குச் சில வாரங்கள் முன்னதாக, தமிழ்நாட்டில் வாய்ப்பாட்டு, நாயனம், மிருதங்கம், வீணை, பிடில், கதை சொல்லல் முதலிய கலைகளில் ஒளிவிட்ட பார்ப்பனரல்லாத இசைவாணர்கள், இசைவாணிகள் பட்டியலை முகவரியோடு குடிஅரசில் வெளியிட்டார். அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது ஈ.வெ.ரா. வின் விருப்பம். அப்பட்டியலில் 36 வாய்ப்பாட்டுக்காரர்களும் 36 மிருதங்கம் வாசிப்போரும் இருந்தார்கள். நாயனத்தில் சிறந்து விளங்கிய பதினாறு பேர்கள் பட்டியலில் இருந்தார்கள். கதை சொல்லுவோர் - காலட்சேபம் நடத்தல் ஆகிய கலைஞர்கள் பத்துப் பேர்கள். தமிழ்ச் சமுதாயத்தில் இன்று ஓரளவு மானத்தோடும் மதிப்போடும் வாழ்கிற எல்லாப் பிரிவினருமே, சமுதாயப் புரட்சி இயக்கமாகிய தன்மான இயக்கத்திற்கும் அதன் தொடக்ககால தியாகிகளுக்கும் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறார்கள். நிற்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/364&oldid=787205" இலிருந்து மீள்விக்கப்பட்டது