பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ_து. சுந்தரவடிவேலு - 493 தொடர்பில்லாத ஒருவருக்காக மற்றொரு தவறு செய்தேன். இழச்சேரி திரு தெய்வசிகாமணி முதலியார், பட்டதாரிகள் தொகுதியிலிருந்து சட்டமன்றத் தேர்தலுக்கு நின்றார். அவருக்காக, என் நண்பர்கள் இடையே தீவிரமாக வாக்கு வேட்டையாடினேன். திரு சண்முகம் கொடுத்துவிட்ட பணத்தில் அய்ந்நூறு ரூபாய்கள் போல் மிஞ்சின. அதை அவரிடமே ஒப்படைத்தேன். அக்காலத்தில் வாக்காளர்கள் யாருக்கு வாக்கு அளிக்க விரும்புகிறார்களோ அவர்களிடம் மட்டுமே பணம் வாங்குவார்கள். எட்டனா, ஒரு ரூபாயே கையூட்டு. ஆகவே, பணம் மிச்சம். 70. திறமைக்கும் நேர்மைக்கும் இங்கு இடமில்லை புலவர் பட்டம் பெற விரும்பினேன் மன்னாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றிலிருந்து விடுபட்டாலும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று போன்றவை பலரை எப்படியாவது வளைத்துக் கொள்வது உண்டு. நான் திருப்பெரும்பூதூரில் குடியிருந்தபோது என்னுள் ஒர் அவா கருவுற்றது. அதற்குக் காரணம் என் இனிய நண்பர்கள். காஞ்சிபுரத்தில் என்னோடு படித்த தாமல் கதிர்வேலு என்பவர் திருப்பெரும்பூதூர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டு இருந்தார். அவருடைய நட்பும் துணையும் புதுப்பிக்கப் பட்டன. அவரோடு, அதே பள்ளியில் திரு இராமலிங்கம் என்பவர் தமிழ் ஆசிரியராகப் பணி புரிந்தார். அவருடைய அண்ணார் திரு இராஜா நாயக்கர், வட ஆற்காடு மாவட்டத்தில் பெயர் பெற்ற தமிழாசிரியர். திரு மரியண்ணா என்னும் கத்தோலிக்கக் கிறுத்துவர் ஒருவர் அப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். - நாங்கள் நால்வரும் கதிர்வேலுவின் வீட்டுத் திண்ணையில் மாலைப்பொழுது கூடுவோம். உடலோம்பலைக் கருதி நெடுந்துாரம் நடந்து வருவோம். எங்கள் திண்ணைப் பேச்சிலும் வழிநடைப் பேச்சிலும் அடிபடாத பெரியவர்கள் இல்லை; பெரிய நிகழ்ச்சிகள் இல்லை. உள்ளுர் ஆட்சி மன்றம் முதல் இந்திய அரசு வரை எடைபோடுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/536&oldid=787456" இலிருந்து மீள்விக்கப்பட்டது