பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 559 ஈரோட்டிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பரவிய பயங்கர பிளேக்' நோய் ஒழிப்புப் பணியாக ராமசாமியின் தொண்டு ஊற்று எடுத்தது. ஈரோடு நகர மன்றத் தலைவர் பதவியாக வளர்ந்தது. மேலும் இருபத்தெட்டு கெளரவப் பதவிகள் என்னும் சிற்றோடைகள் அவர் தொண்டில் சேர்ந்தன. அவ்வேளை, காந்தியடிகள் அரசியல் வானில் எழு ஞாயிராகத் தோன்றினார். இந்திய தேசிய காங்கிரசை மக்கள் இயக்கமாக்கினார். விடுதலை முழக்கம் திக்கெட்டும் ஒலித்தது. பல இரும்பு மனிதர்களை அது ஈர்த்தது. இயற்கையில் உரிமை உணர்வு உடைய ஈ.வெ. ராமசாமி, காந்தி அடிகளின் காங்கிரசில்சேர்ந்தார்; அனைத்தையும் மறந்து விட்டுக் காங்கிரசு இயக்கத்தை வளர்ப்பதில் முனைந்தார். உரிமை உணர்வு, சுதேசி உணர்வு, சமத்துவ உணர்வு ஆகிய மூன்றையும் தமிழ்நாடு முழுவதும் விதைத்தார். தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகவும் தலைவராகவும் வளர்ந்தார். அதற்காகப் பெரும் விலை தந்தார். இருபத்தொன்பது பதவிகளையும் துச்சமாக உதறித் தள்ளினார். காந்தியடிகள், வழக்கு மன்றங்களை ஒதுக்கச் சொன்னார். ராமசாமி செம்மையாகச் செய்து காட்டினார். காலாவதியாகும் தருணத்தில் இருந்த பாண்டு பத்திரங்களை வசூல் செய்யவும் வழக்கு மன்றம் செல்ல மறுத்தார். அதனால் அக்கால அய்ம்பதாயிரம் ரூபாய்களை ஆனந்தத்துடன் இழந்தார். அது மட்டுமா? மதுவிலக்குக் கொள்கையைப் பின்பற்றித் தம் தென்னந் தோப்பிலிருந்த அய்ந்நூறு தென்னை மரங்களை இரவோடு இரவாக வெட்டச் செய்தார். எவ்வளவு பெரிய தியாகம்! முதல் கள்ளுக்கடை மறியலைத் தொடங்கியவர் பெரியார். அவர் மனைவி நாகம்மையாரும் தங்கை கண்ணம்மாளுமே கள்ளுக்கடை மறியலில் பங்கு கொண்ட முதல் இந்தியப் பெண்கள் ஆவார்கள். மறியலில் பெரியார் சிறைப்பட்டார். அது மட்டுமா? இராச வெறுப்பிற்காகவும் சிறைப்பட்டவர் ராமசாமி. தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்த ராமசாமிக்கு வைக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று அங்குச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/602&oldid=787564" இலிருந்து மீள்விக்கப்பட்டது