பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. மாவட்ட அலுவலரின் உரை கல்வித்துறையில் காலெடுத்து வைத்தேன் ஆயரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் இருபத்தைந்தாம் நாள் வெள்ளிக்கிழமை அன்று காந்தம்மாவைக் கைப்பிடித்தேன். அடுத்தநாள் - சனிக்கிழமை - கல்வித்துறை ஏணியில் காலெடுத்து வைத்தேன்; கடைசிப் படிக்கட்டில்தான் கால்வைத்தேன். திருமணத்திற்குப் புறப்படுவதற்கு முன்பே, இளந்துணைப் பள்ளி ஆய்வாளர் நியமன ஆணை என் கைக்குக் கிட்டியது. அதை முன்னரே திருமண நாள் அன்று பிற்பகல் சென்னையிலிருந்தபடியே மதுராந்தகம் உதவிப் பஞ்சாயத்து அலுவலர் பதவியை என் நெருங்கிய நண்பர் திரு. டி.எம். கண்ணபிரானுக்கு ஒப்படைத்தேன். சனிக்கிழமை பொழுது புலர்ந்ததும் பொன்னோரிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்குள்ள பள்ளித் துணைஆய்வாளர் அலுவலகத்திற்குப் போனேன். ஆய்வாளர் திரு. சுந்தரம் அய்யரிடம் இளந்துணை ஆய்வாளராகச் சேர்ந்தேன். அவர் அன்போடு வரவேற்றார். அப்பதவி, பல திங்களாகக் காலியாக இருந்தது. அதனால், பல பள்ளிகள் ஆய்வு செய்யப்படாமல் இருந்தன. தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை முழுத் தணிக்கைக்கு உட்பட வேண்டும். அதுபோக ஆய்வாளர் தமது பார்வையில் உள்ள ஒவ்வோர் பள்ளியையும் ஆண்டுக்கு இருமுறை திடீரெனப் பார்வையிட வேண்டும். ஆண்டுத் தணிக்கையை முன்னறிவிப்புக்குப் பிறகே நடத்தலாம். பார்வையிடுதலோ, தகவல் கொடுக்காமல் நிகழவேண்டும். இரு பார்வையிடுதலுக்கும் இடையே சில திங்கள் செல்ல வேண்டும். சனவரி முதல் டிசம்பர் வரையிலான ஆண்டு முழுவதற்குமான தணிக்கைத் திட்டத்தை ஆண்டின் தொடக்கத்திற்கு முன்பே ஆயத்தம் செய்து, மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும். இத்தகைய நடைமுறையின் வாயிலாகத் தொடக்கப்பள்ளிகள் மெய்யாகவே நடக்கின்றன என்று உறுதிப்படுத்திக் கொள்வோம். பொன்னேரியில் நான் அலுவலில் சேர்ந்தபோது தணிக்கைப் பாக்கியைக் காட்டினார், திரு. சுந்தரம் அய்யர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/645&oldid=787613" இலிருந்து மீள்விக்கப்பட்டது