பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 629 எனவே, ஆசிரியரின் ஆலோசனையை ஏற்கவில்லை. எவருடைய உதவியையும் பெற்று, மாறுதலை மாற்றி, ஆணை பெறவும் ஒப்பவில்லை. பொன்னேரிக்குத் திரும்பிச் சென்று, பதவியைத் தேசிகரிடம் ஒப்புவித்துவிட முடிவு செய்தேன். பேருந்துக்காகக் காத்திருந்தோம். நல்ல வேளை, அது வந்தது. அதில் ஏறிச்சென்றோம். ஆனால் அது பென்னேரிக்குச் செல்லவில்லை. கூட்டுச் சாலையில் இறக்கிவிட்டுச் சென்றது. அங்கிருந்து என் கடைநிலை ஊழியர், ஆய்வாளர் ஊழியர், நான் ஆகிய மூவரும் பொன்னேரியை நோக்கி நடந்தோம். டிசம்பர் கடைசிக் காலக் குளிரில், நான்கு கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்றோம். இரவு எட்டரை மணிக்குமேல், ஆய்வாளர் அலுவலகத்தைச் சென்றடைந்தோம். திரு. அமிர்தலிங்க தேசிகர், என் வருகைக்காகக் காத்திருந்தார். அலுவலக உதவியாளர், பதவி மாறுதலுக்கான படிகளை ஆயத்தமாக வைத்திருந்தார். 'அய்யா உங்களுக்குத் தொல்லை கொடுத்துவிட்டேன். என் விடுப்பு முடிவதற்கு முன்பே, காலாகாலத்தில், நியமன ஆணைக்கு விண்ணப்பித்து விட்டேன். மண்டல ஆய்வாளர் அலுவலகத்திற்கு நடையாக நடந்தேன். 'கடைசிவரை காலம் கடத்திவிட்டு, என்னைப் பொன்னேரிக்குப் போகும் ஆணையைக் கையில் கொடுத்து, உடனே சென்று, நெ.து. சுந்தரவடிவேலுவை விடுதலை செய்துவிடு' என்று அலுவலக நிர்வாகி திரு. வரதாச்சாரியார் சொன்னார். 'எனக்குக்கூட, சென்னைக்குத் தெற்கே போட்டிருந்தால் பிடித்திருக்கும். என்ன பண்ணுவது? இதுவும் போய்விட்டால் கடைகோடிக்குத் தள்ளி விடுவார்களோ என்று அஞ்சி வந்துள்ளேன்' என்று விளக்கம் சொன்னார். அவர் கூற்று மெய்யாக இருப்பினும் பொய்யாக இருப்பினும் ஒன்றே. பதவி மாற்ற அறிவிப்பில், கையெழுத்திட வேண்டிய இடங்களில் கையெழுத்திட்டோம். 'சென்றதினி மீளாது" என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். அப்போது ஆண்டுத் தணிக்கை அறிக்கை களுக்குப் படிகள் எடுக்க வேண்டுமென்பது நினைவிற்கு வந்தது. அத்திட்டங்களுக்கான நாள்குறிப்பிற்கும் படி எடுக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/672&oldid=787643" இலிருந்து மீள்விக்கப்பட்டது