பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நினைவு அலைகள்

கடைநிலை ஊழியர்களின் டவாலி'யும் எழுத்தர்கள் கைகளில் இருந்த மாலைகளும் அவர்களை இனம் காட்டிற்று: அடையாளம் காட்டிற்று.

வந்திருந்தவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து, தலைமை எழுத்தர் வரவில்லை என்பது தெரிந்தது.

அந்த அகாலத்தில் வர இயலாமை குறையாக எனக்குத் தோன்றவில்லை.

ஆனால், சில மணித்துளிகளில், ஒருவர் நாரதர் வேலை செய்தார்.

‘தலைமை எழுத்தர் பெயரைச் சொன்னார். அவர் பார்ப்பன உணர்வில் ஊறிப்போன அய்யங்கார். நீங்கள் இங்கு வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, உங்களை வரவேற்க வரவில்லை; நாங்கள் அழைத்தும் வரவில்லை; இப்படிச் சொல்லி என்னிடம் கலகமூட்டினார் ஒருவர்.

இதற்குள் வெளியே காத்திருந்த காரிடம் வந்து சேர்ந்தோம். அதில் ஏறிச் சென்றோம்.

குடியிருக்க வீடு பிடிக்கும் வரை அலுவலகத்திலேயே ஓர் அறையில் தங்க ஏற்பாடு செய்து இருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றார்கள். காலை நான்கு மணியளவில் அங்குப் போய்ச் சேர்ந்துவிட்டோம்.

பொழுது விடிய விழித்துக்கொண்டோம். காலைக் கடன்களை முடித்து, சிற்றுண்டியை முடிக்கையில் மணி எட்டுக்கு மேல் ஆயிற்று.

சேலம் நண்பர்கள் சிலர் என்னைக் காண வந்தார்கள். அவர்கள். தன்மான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். சேலம் நகரில் பலருக்கும் தெரிந்தவர்கள்.

என் அலுவலக எழுத்தர் ஒருவர் வழியாக என் வருகை பற்றித் தெரிந்துகொண்ட அவர்கள், என்னைக் கண்டு வரவேற்க வந்தார்களாம்.

‘நண்பர்கள் என்று அடையாளங்காட்டச் சிலராவது இருக்கிறார்களே, என்று மகிழ்ந்தேன். சில வினாடிகளில் அது மாறி விட்டது.

புகைவண்டி நிலையத்தில் நாரதர் கோள் சொன்னதைப் போன்றே நண்பர்களில் ஒருவர் தலைமை எழுத்தர் பற்றிக் கோள் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஏற்கெனவே கேட்ட புகார்.

மகிழ்ச்சி கலைந்தாலும் எரிச்சல் கொள்ளவில்லை. காதுகளைக்

கொடுத்ததோடு நின்றுவிட்டேன்; மனக்கதவை இறுக அடைத்து விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/120&oldid=622982" இலிருந்து மீள்விக்கப்பட்டது