பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நினைவு அலைகள்

சீகாகுளம் சரக பள்ளி இளந்துணை ஆய்வாளர் ஒருவரை, தனியார் தொடக்கப் பள்ளி நிர்வாகி, ஒருவர், வழிமறித்து அடித்துவிட்டார். ஏன்?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, தொடக்கப் பள்ளிகளில் பல, ஏட்டில் மட்டுமே இருந்தன; நாட்டில் நடைமுறையில் அவை இல்லை.

அத்தகைய ஏட்டுப் பள்ளிகள், நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இரா. எளிதில் போய்ச் சேரமுடியாத சிற்றுார்களில் நடப்பதாகத் தோன்றும்; ஆனால் உண்மையில் இயங்கா.

பள்ளித்துணை ஆய்வாளர், பார்த்து, தண்டிக்கப் பரிந்துரைக்க மாட்டாரா? நிச்சயம் செய்வார்.

ஆனால், பள்ளி இல்லையென்பதை அவ்வளவு தெளிவாக மெய்ப்பிப்பது கடினம். எதனால்?

ஆய்வாளர், ஆண்டுத் தணிக்கைக்குப் போவதானால் போதிய முன்னறிவிப்பு கொடுக்கவேண்டும்.

அத்தகைய அறிவிப்பு வந்ததும் பள்ளி நிர்வாகி விழித்துக் கொண்டு, சில பையன்களையும் பெண்களையும் திரட்டி ஏதோ சொல்லிக் கொடுத்து, ஆயத்தமாக வைத்திருப்பார்.

திடீர்ப் பார்வையில் எந்த வகையிலும் சிக்க மாட்டார்களா? சிக்குவது மிக மிக அரிது. முறையில் உள்ள கோளாறு, பொய்யர்களுக்கு உதவிற்று.

ஆண்டுத் தணிக்கைக்குப் போகும்போதே, அக்கம் பக்கத்துப் பள்ளிகளைத் திடீர்ப் பார்வையிட வேண்டும். இது விதி.

எனவே, ஏதாவது ஒரு பள்ளிக்கு ஆண்டுத் தணிக்கை அறிவிப்பு வந்தால், அப் பள்ளி நிர்வாகி, சுற்றியுள்ள பள்ளிக்குத் தகவல் கொடுத்துவிடுவார்.

இல்லாத பள்ளிக்கூடம், நடப்பதுபோல் காட்ட, நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் துணை புரிந்துகொள்வார்கள்.

இந் நிலையில், புதிதாக இளந்துணை ஆய்வாளராக வந்த ஒர் இளைஞர் - எம்.ஏ.எல்.டி. பட்டதாரி - ஒரு பள்ளியை மெய்யாகவே திடீரெனப் பார்வையிட்டுவிட்டார்.

அவருக்கு வந்த மொட்டைக் கடிதம் ஒன்று, குறிப்பிட்ட ஊரில் தொடக்கப் பள்ளி நடக்கவில்லை; பொய்க்கணக்கு எழுதி அனுப்பி, நிர்வாகி பணம் கொள்ளை அடித்து வருகிறார், என்று குற்றம் சாட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/72&oldid=623443" இலிருந்து மீள்விக்கப்பட்டது