பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நினைவு அலைகள்

புதிய வேலை; நிறைய வேலை; அது நிறைவைத் தந்தது. மனைவியின் உடல் நலக்குறைவு வேதனைக்கு ஊற்றாயிற்று.

உலக அரங்கிலும் வேதனை சூழ்ந்தது. போர் மேகங்கள் இருண்டு கவிந்தன. இட்லரின் மண்ணாசை, அவனது படைகளை - பொறுக்கி எடுக்கப்பட்ட மறவர்களை விமானப்படைகளை சோவியத் நாட்டினைத் தாக்க அனுப்பியதை முன்னரே குறித்துள்ளேன்.

வல்லவனுக்கும் ஒரு வல்லவன் இருப்பான். கிழடு தட்டிப் போன, பிரான்சு வீழ, பிரிட்டனும் தள்ளாடக் கண்ட இட்லர், பாட்டாளிகளின் நாடாகிய சோவியத் நாட்டை ஆறு வாரங்களில் பிடித்துவிட முடியும் என்று, மனப்பால் குடித்தான். கனவு கண்டான்.

அந்தக் கணக்கு தப்புக் கணக்காகி விட்டது; வெறும் கனவாகி விட்டது.

ஆறு திங்களில்கூட சோவியத் நாட்டைப் பிடிக்க இயலவில்லை; போர் ஆண்டுக்கணக்கில் நீண்டது.

இறுதியில்?

சோவியத் படை, செர்மானியப் படையை முறியடித்தது; துரத்தியடித்தது; பெர்லின் வரை நாசிப்படைகளை விரட்டிக் கொண்டு சென்றது.

செர்மனியின் தலைநகராகிய பெர்லின் நகரில், செஞ்சேனையின் வெற்றிக் கொடியை நாட்டிப் புகழ் பெற்றது.

அப்படிச் செய்ய எப்படி முடிந்தது? சோவியத் மக்கள் அனைவருமே அறைகூவலை ஏற்றுக் கொண்டனர்; வீரத்துடன் விவேகத்துடன் போராடினர்.

ஒரு நாட்டின் மெய்யான பாதுகாப்பு, அந்த நாட்டின் பொது மக்களே, என்பதை அன்று உலகம் அறிந்தது.

இப்போதைய நிலையில், இந்தப் பாடத்தை இந்தியர்களாகிய நாம் திரும்பப் படிப்பது நல்லது.

மேற்கே, சோவியத் மண்ணில், செர்மானியப்படை மாட்டிக் கொண்டு, உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கையில் கிழக்கே, சப்பானியர் படை எடுத்து வந்தனர். சின்னஞ்சிறு நாடுகளையெல்லாம் விழுங்கி, எக்காளமிட்டுக்கொண்டு, இந்தியாவை நெருங்கினர்.

சயாம், இந்தோசீனா, பர்மா - சப்பானியர் கைவசமாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/80&oldid=623452" இலிருந்து மீள்விக்கப்பட்டது