பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதிடமும் கற்றிருந்தார். மந்திரமும் அவருக்குத் தெரியும் வெற்றிலை யில் மைதடவி, மர்மமான விஷயங்களைக் கண்டறிந்து சொல்லும் திறமை பெற்றிருந்தார். புதையல் எங்கே இருக்கிறது. காணாமல் போன மாடு எங்கு நிற்கிறது, திருடு போன பொருள் எவரால் களவாடப் பட்டுள்ளது - அது திரும்பக் கிடைக்குமா கிடைக்காதா என்பன போன்ற சமாச்சாரங்களை மை போட்டுப் பார்த்துச் சொல்வதையும் அவர் தொழிலாகக் கொண்டிருந்தார். காக்கி நிறத் துணியில் நீண்ட சட்டை அணிந்து, கழுத்தில் வல்லாட்டாக ஒரு லேஞ்சியைத் தொங்கவிட்டு, சிரித்தமுகத்துடன் அவர் காட்சி தந்தார். எடுப்பான மீசை அவர் முகத்துக்கு அழகு சேர்த்தது. குடும்பத்தில் வரக்கூடிய காய்ச்சல் மற்றும் நோய்களுக்கும் செல்லம் பண்டிதர், கை பார்த்து, மருந்துகள் கொடுப்பார். எல்லாம் செந்தூரப் பொடிகள் தான். தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டியிருக்கும். அவருக்கு சமூகத்தில் வைத்தியர் என்ற தன்மையில் மதிப்பும் நல்ல பெயரும் ஏற்பட்டிருந்த போதிலும் பெரியவர்கள் சிறியவர்கள் உள்பட அனைவரும் அவரை நீ என்றே விளித்துப் பேசுவர். அவருக்கு மச்சினன் உறவு உடைய சொர்ணம் பண்டிதர் என்பவரும் வைத்தியர்தான். செல்லம் பண்டிதர் மாதிரி அவர் பெயர் பெற்றிருக்கவில்லை. அவருடைய தொழில் கிராமங்களிலேயே நடந்து வந்தது. அவரும் வயதானவர்தான். அவர் சட்டை அணிவதில்லை. சிட்டித் துண்டை தோளில் மடித்தவாறு திரிவார். அவரையும் அனைவரும் நீ என்றே குறிப்பிட்டு வந்தனர். அப்பாவின் நோய் எவருடைய மருந்துக்கும் கட்டுப்படவில்லை. பாளையங்கோட்டையிலேயே பிரசித்தி பெற்ற, கைதேர்ந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார் என்று சிலர் சொல்லவும், அவரும் வரவழைக்கப் பட்டார். அவரும் நாவிதர் இனப் பண்டிதர்'தான். ஆனால், பணக்காரர். வைத்தியத் தொழில் வெற்றிகரமாக நடந்து வந்தது அவருக்கு சொந்தமாக நேர்த்தியான வில்வண்டியும் அருமையான ஜோடிக்காளைகளும் அவர் வைத்திருந்தார். கோட்டு அணிந்து, மிடுக்கான தோற்றப் பொலிவுடன், வண்டியில் வந்து இறங்குவார். நோயாளியின் நாடி பார்த்து மருந்துகள் கொடுப்பார். உடனடியாக அவருக்கு உரிய பணத்தை கொடுத்து விடவேண்டும். அவர் வந்து பார்க்கிற ஒவ்வொரு முறையும் நாற்பது ரூபாய் - ஐம்பது ரூபாய் என்று வசூலித்து விடுவார். அக்காலத்தில் அது பெரும் தொகைதான். நிலைபெற்ற நினைவுகள் 107