பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைபார்த்து, மருந்து கொடுப்பாரே தவிர, அந்தப் பண்டிதர் நோயாளியின் உடல்நிலை எப்படி இருக்கிறது, முன்னேற்றம் கண்டிருக்கிறதா அல்லது சரிவுதானா என்று எதுவும் சொல்லமாட்டார். மருந்து கொடுத்துப் பணத்தை வாங்கிக் கொண்டு முகத்தில் எவ்வித பாவமும் காட்டாது. வண்டியில் ஏறிப்போய் விடுவார். அன்றும் அப்படித் தான் நடந்தது. பண்டித வைத்தியர் வந்தார். கைபிடித்துப் பார்த்தார். மருந்துகள் கொடுத்தார். நாற்பத்தைந்து ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு அவர் இயல்புப்படி வண்டியை நோக்கி நடந்தார். அப்பாவின் உடல் நிலை மோசமாகி வருவதாகக் கருதியவர்கள் - வைத்தியர் வந்த போது அருகில் நின்றவர்கள் - இப்ப எப்படி இருக்கு என்று கேட்டார்கள். அவர் வாய்திறந்து எதுவும் சொல்லாமலே, தலையை ஆட்டிவிட்டு வண்டியிலேறி அமர்ந்தார். வண்டி வேகமாகச் சென்று மறைந்தது. வண்டி போய் சிறிது நேரத்திலேயே அப்பாவின் உயிர்பிரிந்தது. 'இழுத்துக்கிட்டிருக்கு. பிழைக்கிறது கஷ்டம் தான்னு இந்த வைத்தியனுக்குத் தெரியாமலா இருக்கும்? வாய் விட்டுச் சொன்னால், பணம் கிடைக்காதேன்னு எண்ணியிருப்பான். சாவு வந்திட்டுதுன்னு தெரிஞ்சிருந்தும் இரக்கமில்லாமல் நாப்பத்தஞ்சு ரூபாய் கேட்டு வாங்கி, கோட்டுப்பாக்கெட்டில் சொருகிக்கிட்டுப் போறானே இவன் எல்லாம் என்ன மனிசன் என்று வயிற்றெரிச்சலோடு புலம்பித் தீர்த்தார், பண்டிதரிடம் நிலைமை எப்படி இருக்கு என்று விசாரித்த உறவினர். இப்படியாக அப்பா இறந்து போனார். 1930ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள். அப்போது எனக்கு வயது பத்து நடந்து கொண்டிருந்தது. ராஜவல்லிபுரத்திலிருந்து பெரியப்பா மற்றும் உறவினர்கள் பலரும் வந்து சேர்ந்தார்கள். செய்ய வேண்டிய முறைப்படி இறுதிச்சடங்குகள் எல்லாம் நடைபெற்றன. பாளையங்கோட்டை நகரிலிருந்து ஒன்றரைமைல் தொலைவிலிருந்தது வெள்ளக்கோயில் தோப்பு எனும் சுடுகாடு, தாமிரவர்ணி ஆற்றின் கரைமீது அது அமைந்திருந்தது. அப்பாவின் உடல் அங்கு கொண்டு செல்லப்பெற்று, எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. பதினாறு நாள்களும் கட்டுப்படி செய்ய 108. 38 வல்லிக்கண்ணன்