பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் வசித்த தெருவில் ஒரு வீட்டில் குடியிருந்த ஒருவர்- ரங்கூன் பிள்ளை என்று பெயர் பெற்றிருந்தார் - ஆனந்த விகடன் இதழ்களை ஆரம்ப காலத்திலிருந்து சேகரித்து வருடவாரியாக பைண்டு செய்து பாதுகாத்து வந்தார். படிப்பதில் எங்களுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த அவர், விகடன் தொகுதிகளை படிக்கத் தந்தார். 1930களில், இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் இயக்க வேகம் பெற்றிருந்தது. நாடு நெடுகிலும் ஊர்வலங்களும் சொற்பொழிவுகளும், ஜவுளிக் கடை மறியல்களும் மும்முரமாக நடந்து வந்தன. மகாத்மா காந்தியின் கட்டளையை ஏற்று வக்கீல்களும் டாக்டர்களும் இதர பல உத்தியோகஸ்தர்களும் அவரவர் வேலைகளை துறந்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் உற்சாகத்தோடு ஈடுபட்டார்கள். பெண்களும் துணிச்ச லோடு வெளியே வந்து மறியல்களில் கலந்து கொண்டார்கள். மேடை ஏறிப் பேசினார்கள். ஊர்வலங்களில் கவி பாரதியாரின் தேசியப் பாடல்கள் உணர்ச்சி வேகத்தோடு பாடப்பட்டன. சாதாரணத் தொழிலாளிகளும், பெட்டிக் கடை வைத்துப் பிழைக்கிறவர்களும் மற்றும் பல தரத்தினரும் பாட்டுப் பாடிக் கொண்டு ஊர்வலமாக வந்து முடிவில் கோபாலசாமி கோயில் முன்பக்கம் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். நானும் சிலசமயம் ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து செல்வேன். பொதுக்கூட்டப் பேச்சுகளைக் கேட்கக் கூடும் ஜனத்திரளுடன் சேர்ந்து கொள்வேன். காந்திக்குல்லாய் அணிந்த தொண்டர்களில் ஒருவர், கூம்பு வடிவத்தில் அமைந்த தகரக் குழாயை வாயருகே பிடித்தபடி உரத்துக் கூச்சலிடுவார்: போலோ பாரத் மாதா கி - என்பார். (சொல்லுங்கள், பாரத மாதாவுக்கு என்பது பொருள்) ஜே என்று மக்கள் கத்துவார்கள். அக்காலத்தில் மேடைப் பேச்சில் பெரும்பெயர் பெற்றிருந்த சோமயாஜலு, பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை, போன்றவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசுவார்கள். சிலசமயம் சென்னையிலிருந்து சிறந்த பேச்சாளர்களும் வருவது உண்டு. சத்தியமூர்த்தி வந்து சொற்பொழிவாற்றியதையும் கேட்டிருக்கிறேன். பெரும் தலைவர்கள் வந்து பேசுவதாக இருந்தால், தாமிரவர்ணி ஆற்றங்கரையில், கொக்கிரகுளம் பகுதியில் விரிந்து பரந்து கிடந்த L೦೯rು வெளியில், தைப்பூச மண்டபத்தின் அருகே கூட்டம் ஏற்பாடு செய்யப் 120 88 வல்லிக்கண்ணன்