பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெசஞ்சர் சுந்தரம் சிலமாதங்களிலேயே பூரீவைகுண்டம் ஆபீசை விட்டுப் போய்விட்டார். பூச்சி மருந்து விஞ்ஞானி சுப்பய்யரிடம் சொல்லி, அவருக்கு உதவியாளாகத் தன்னை மாற்றும்படி ஏற்பாடு செய்து கொண்டார். சுப்பய்யருக்கு சுந்தரத்தின் இயல்புகளும் வேலை செய்யும் திறமையும் பிடித்திருந்ததால், அவரே முயன்றுதன் கீழ் பணிபுரியும் மெசஞ்சராக ஆக்கிக் கொண்டார். சுந்தரம் இருந்த இடத்தில் சுடலை முத்துத் தேவர் என்று ஒரு சாதாரண நபரை அந்தோணிப் பிள்ளை மெசஞ்சராக நியமித்துக் கொண்டார். தேவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கையெழுத்துப் போடக் கூட அறியார். தேவரின் மனைவி அந்தோணிப் பிள்ளை வீட்டில் வேலைக் காரியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தாள். அவள் தன் கணவனுக்கு ஆபீசில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி டிமான்ஸ்ட்ரேட்டரை வேண்டிக் கொண்டாள். அவருடைய மனைவியையும் சிபாரிசு செய்யும்படி கோரி, காரியத்தை சாதித்துக் கொண்டாள். என் பெயரைக் கூட எழுதத் தெரியாதே என்று தேவர் தயங்கினார். அது ஒண்ணும் பெரிசில்லே வேய், உம்ம பேர என்ன, ஒன்பது எழுத்து - சுடலை முத்து தேவர்; அதை லேசா எழுதிப் பழகிவிடலாம் என்று அந்தோணிப் பிள்ளை சொன்னார். கற்பலகை ஒன்றில் அந்தப் பெயரை எழுதிக் கொடுத்து, இதைப் பார்த்து சதா எழுதும் எழுதி எழுதிப் பழகும் தானா எழுத வந்திடும் என்று ஊக்கப்படுத்தினார். தேவரும் அப்படியே செய்தார். கற்பலகையில் எழுதித் தேர்ந்ததும், காகிதத்தில் பென்சில் கொண்டு எழுதிப் பழகும்படி செய்தார் அதிகாரி அவ்வாறு எழுதி எழுதி பெயரை மட்டும் எழுதக் கற்றுக் கொண்டார் சுடலை முத்து தேவர். அவர் அந்தோணிப் பிள்ளைக்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டார். அவருடைய வீட்டு வேலைகளையும் விரும்பிச் செய்தார். ஆபீசர் ஆபீசுக்கு வந்தால் அவரோடு தேவரும் கூட வருவார். அவர் போகிற போது தேவரும் உடன் சென்றுவிடுவார். ஆகவே ஆபீசில் எப்போதும் தனிமை குடி கொண்டிருந்தது. அது எனக்கு மிக வசதியாக இருந்தது. நான் எழுதுவதிலும் படிப்பதிலும் உற்சாகமாக ஈடுபட்டிருந்தேன். 216 38 வல்லிக்கண்ணன்