பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாங்கப்பெற்ற கூடு வெறுமையாகக் கிடந்தது, வெகுநாள் வரை. வேறு கிளியையோ அல்லது மைனாவையோ பிடித்து வளர்க்க வேண்டும் என்ற நினைப்பு யாருக்கும் இருக்கவில்லை. எங்கள் வீட்டில் நாய் கூட வளர்க்கப்பட்டதில்லை. - அந்த வீட்டில் வசித்த நாள்களில், ஒரு சமயம் தனித்தன்மையோடு அமைக்கப்பட்ட பெரிய வட்ட வடிவக் கூடைகளில் அடிப்பகுதி பிரப்பங்கூடையாகவும் மேல்பகுதி பருமனானகயிற்று வலை பின்னப் பட்டதாகவும் இருந்தன. நிறைய நிறைய வாத்துக்கள் அடைக்கப்பட்டு, வண்டியில் கொண்டுவந்து இறக்கப்பட்டன. நாலைந்து கூடைகள் இருக்கலாம். பல கூடைகளில் முட்டைகளும், மாம்பழங்களும் வந்திறங்கின. இவ்வளவு வாத்துக்களும் முட்டைகளும் பழங்களும் எதற்காக என்று ஆச்சர்யப்பட்ட எங்களுக்கு அப்பா விளக்கினார். இன்ஸ்பெக்ஷனுக்காக சூப்ரண்டு துரை வாறார். அவர் சாராயக் கடைகள் கள்ளுக்கடைகள், அவற்றின் கணக்கு வழக்குகளை எல்லாம் சோதிப்பார். அவரை திருப்திப்படுத்துவதற்காக, அவர் சோதனை முடித்துப் போகிற போது, இவற்றை எல்லாம் அவருக்கு கொடுத்து அனுப்புவோம். சாராயக்கடை லைசன்ஸ்தார்களும், கள்ளுக்கடை குத்தகைக்காரர்களும் இவற்றை வாங்கி அளிக்கிறார்கள் என்று அப்பாசொன்னார். ஒரு ஆளுக்கு இத்தனை கூடைகள் நிறைய வாத்துக்களும் முட்டைகளும் பழங்களும் எதற்காக? இவ்வளவையுமா அவர் சாப்பிடமுடியும்? இப்படி சந்தேகம் எழுந்தது எனக்கு ஒருத்தரே சாப்பிடமுடியுமா? அவரும் வேண்டியவர்களுக்கு பரிசாகக் கொடுப்பார் விருந்துகள் வைத்துப் பல துரைமார்களை அழைத்து சாப்பாடு போடுவார். மீதியிருந்தால் ஆள்மூலம் விற்கவும் செய்யலாம். அவர் என்ன செய்வார் என்பது முக்கியமில்லை. சூப்ரண்டு துரை சந்தோஷப்படும்படி அவருக்கு தாராளமாகக் கொடுத்து அனுப்பணும். இது தான் வழக்கம் என்று அப்பா தெரிவித்தார். அப்பா எங்களிடம் எப்பவும் பிரியமாகவே இருந்தார். இரவு நேரங்களில், சாப்பாட்டு வேளையில், உற்சாகமாகக் கதைகள் சொன்னார். கால்திருடன், அரைத் திருடன், முக்கால் திருடன் கதை, ஜில் சதாரம் கதை, அல்லி அர்ஜுனன், பவளக்கொடிகதை என்று பலவகையான கதைகளும் சொல்வார். உத்தியோக அனுபவத்தில், அவர் நிலைபெற்ற நினைவுகள் : 57