பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுடைய அண்ணன் தேர்ந்த நடிகன் என்றும், அவன் சேர்ந்துள்ள நாடகக்குழு அச்சமயத்தில் இலங்கை யாழ்ப்பாணம் எல்லாம் சென்று நாடகங்கள் நடத்துவதாகவும் அவள் சொன்னாள். சுருள் சுருளாக அவள் சேர்த்து வைத்திருந்த பல வர்ண நாடக நோட்டீசுகளையும் அவள் காட்டி மகிழ்ந்தாள். பெரிய பெரிய நோட்டீசுகள் அவை. ஒவ்வொன்றிலும், வெவ்வேறு வேடத்தில், முக்கியமாக ஒரு நடிகனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. அது தான் அவள் அண்ணன் என்று அந்த அக்காள் பெருமையுடன் தெரிவிப்பாள். சில மாதங்களில் அவள் பெரிய மனுஷி ஆகிவிட்டாள் எனச் சடங்குகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு அவள் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. நாங்களும் அங்கே போகக் கூடாது என்று எங்கள் அம்மா கார்வார் பண்ணிவிட்டாள். காலியாகக் கிடந்த வெற்று மனையின் ஒற்றையடித்தடத்தின் வழியாகத் தான் நாங்கள் பள்ளிக்கூடம் போய் வருவோம். அப்படிப் போகிற பாதையில், பெரிய ரஸ்தாவை ஒட்டி செங்கோல் மடம் என்ற சைவ சமய மடம் இருந்தது. பெரிய மடம் தான். அங்கு தினம் பூஜைகள் நடைபெறும் தேவார திருவாசகப் பாடல்கள் ஒதப்படும். செழிப்பாக இருந்து நன்கு செயல்பட்டு வந்த பெருங்குளம் செங்கோல் மடம் பின்னர் சிலரது சொத்துத் தகராறு - கோர்ட்டு வழக்குகள் காரணமாக இடைக்காலத்தில் மூடுண்டு கிடக்க நேர்ந்தது. மடத்தின் சில பகுதிகள் இடிந்து சிதைந்து, புல்லும் பூண்டும் எருக்கஞ் செடிகளும் முளைக்கும் இடமாக மாறியிருந்தது. கால ஓட்டத்தில் வழக்கு மடத்துக்கு சாதகமாகத் தீர்ப்பாயிற்று மீண்டும் மடம் நன்னிலை பெற்றது. கட்டிடங்கள் புதுப்பிக்கப் பெற்றன. மறுமலர்ச்சி பெற்ற செங்கோல் மடம் வளமுற்று வனப்புடன் விளங்குவதையும் நான் காணமுடிந்தது. மனிதர்களின் வாழ்க்கை போலவே கட்டிடங்களும் நிறுவனங்களும் உயர்வுதாழ்வுகள், சரிவுகள் மீட்சிகள், வறட்சிகள் வளங்களை எல்லாம் அனுபவிக்க நேரிடுகின்றன என்ற எண்ணம் என்னுள் எழுவது உண்டு. பெருங்குளத்தில் தென்னை மரங்கள் மிகுதியாக வளர்ந்து காணப்பட்டன. பள்ளிக்கூடம் போகிற வழி நெடுகத் தென்னைகள். பள்ளிக்கூடத்தின் சுற்றுப்புறங்களில் தென்னந்தோப்புகள். ஆகவே ஊரின் சூழல் குளுமையாகவும் பசுமையாகவும் இருந்தது. நிலைபெற்ற நினைவுகள் 部 69