பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் * 11 எழுதிப் பழக வேண்டும் என்பதற்காக இதய ஒலி என்ற கையெழுத்துப் பத்திரிகையை உருவாக்கினேன். மாத இதழ் அது. இதழின் பக்கங்கள் அனைத்தையும் நானே நிரப்பினேன். கதை, கட்டுரை, கவிதை, சிறுநாடகம் என்று பல வடிவங்களிலும் எழுதினேன். கதைகளுக்கான படங்களையும் நானே வரைந்தேன். எழுதியவற்றில் முக்கியமானவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். புதிய எழுத்துகளை வரவேற்று வெளியிடக்கூடிய இதழ்கள் பல ஊர்களிலிருந்து வந்து கொண்டிருந்தன. புதுக்கோட்டையிலிருந்து அணிகலம்’ ‘திருமகள்' என்ற மாத இதழ்கள் வெளிவந்தன. வெ. கதிரேசன் செட்டியார் என்பவர் ‘அணிகலம்’ பத்திரிகையை அக்கறையோடு வளர்த்து வந்தார். தரமான எழுத்துகளை வரவேற்று வெளியிட்டார். அதில் மாதம்தோறும் எனது கதை இடம் பெற்றது. திருநெல்வேலியிலிருந்து தொ.மு.சி. ரகுநாதனும் கதைகள் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். அவையும் அணிகலம்’ இதழில் பிரசுரம் பெற்றன. இலக்கிய விமர்சனம் குறித்து அவர் ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். பிற்காலத்தில் அதை விரிவுபடுத்தி 'இலக்கிய விமர்சனம் என்ற நூலாக அவர் வெளியிட்டார். தமிழில் இலக்கிய விமர்சனம் குறித்து வெளிவந்த முதலாவது புத்தகம் அதுதான். அண்ணாமலை சர்வகலாசாலை (பல்கலைக்கழகம் என்பது அந்நாள்களில் வழக்கச் சொல் ஆகியிருக்கவில்லை) பேராசிரியர் சி.ஆர். மயிலேறு அணிகலம் இதழில் நாடகங்கள் எழுதி வந்தார். ஓரங்க நாடகங்கள் எழுதுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார். ‘அணிகலம் ஆண்டுதோறும் ஒரு மலர் வெளியிட்டது. அளவில் சிறியது தான். ஆயினும் விஷயச் சிறப்பு கொண்டதாக இருக்கும். - 'திருமகள் பெரிய வடிவம் கொண்டது. இன்றைய 'கணையாழி அளவில் இருக்கும் என்று சொல்லலாம். அணிகலம்’ 'ஆனந்த விகடன் அளவில் அமைந்திருந்தது. திருமகளில் பக்கங்களும் அதிகம். ராசி. சிதம்பரம் என்பவர் அதன் பதிப்பாசிரியர். இராம. மருதப்பர் அதன் ஆசிரியர். திருமகள் என் கதை கட்டுரைகளை இதழ் தோறும் வெளியிட்டது. ரகுநாதன் கதைகளும் அதில் வந்தன. . -