பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நோயில்லாமல் வாழ நுட்பமான வழியைக் கண்டறிந்த பிறகு, ஏன் நாம் வாளா இருக்க வேண்டும்?

ஆகவே, அனுபவசாலிகளின் அருமையான கருத்திற்கு செயல் வடிவம் தாருங்கள். வாருங்கள் பயிற்சி செய்ய! வாழுங்கள் நன்மைகள் பல உடல்நலத்தின் மூலம் பெற்று’ என்று உங்களை வாழ்த்துகிறோம்.

பயிற்சி பற்றிய விவரங்களை எழுதத் தொடங்கினால் பக்கங்கள் அதிகமாகும். ஏற்கனவே வெளியாகியுள்ள எனது உடற்பயிற்சிக்கான நூல்களை, வாங்கிப் படித்துப் பின் பற்றி பயனடையுங்கள்.

ஆண்களுக்கான நூல் நீங்களும் உடலழகு பெறலாம். பெண்களுக்கான நூல் என்றால்: பெண்களும் பேரழகு பெறலாம் எனும் நூல்களை நீங்கள் பின்பற்றலாம்.

இறுதியாக ஒன்று. எவ்வளவு நாள் உலகத்தில் இருக்கிறோம் என்பதில் இல்லை மகிழ்ச்சியும் ஆனந்தமும். நோயும் புலம்பலுமின்றி, எத்தனை நாள் இருந்தோம். பிறருக்கு உதவி புரிந்தோம் வாழ்வை சுகமாக அனுபவித்தோம் என்பதில்தான் வாழ்வின் சுவையும் வளமும் நிறைந்திருக்கிறது.

நீங்களும் நோயில்லாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நிறைத்துக் கொண்டால் போதாது, நல்ல முறைகளை, வழிகளை விதிமாறா செயல்களைப் பின்பற்றுங்கள், நல்லதே விளையும் நல்லதே மலரும். புலரும் பொழுதெல்லாம் பூரிப்பும் புளகாங்கிதம் தரவே வரும் - வளரும் என்று வாழ்வோம். வாழ்க்கையின் குறிக்கோளும் இதுதான்.