பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

75


4. உலா வரும் உடலும் உலகமும்

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் உயிருடனேதான் இருக்கின்றன. உயிர்தான் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்று என்பதை நாமெல்லாம் அறிவோம். உயிரைத் தாங்கி வாழும் உடல்தான் அதன் அடிப்படை ஆதாரம் என்பதால், உடலை வைத்தே உலக வாழ்க்கை அமைந்திருக்கிறது.

எல்லா உயிரினங்களையும் ஒருமுறை பார்த்துவிட்டு மனித உடலையும் பாருங்கள், மற்ற உயிரினங்களின் உடல்களைவிட அழகில், தரத்தில், நிறத்தில். திறத்தில் ஈடிணையற்ற ஒன்றாகவே நமது உடல் விளங்குகிறது. துலங்குகிறது. புல்லாய் பூண்டாய் என்று தேறி, கடைசியில் குரங்காய் உருவாகி அதிலிருந்து தோன்றினான் மனிதன் என்று பரிணாமவாதிகள் பலப்பட எடுத்துரைத்தாலும், ஒன்று மட்டும் உண்மை!

கடவுளின் விலை மதிப்பற்ற பெரும் பரிசாக மனிதனுக்குக் கிடைத்திருப்பது அவனது உடல்தான். அரிய பெரிய ரகசியங்களையும் அதிசயங்களையும் தன்னகத்தே அடக்கி வைத்துக் கொண்டு, அண்டங்கள் அத்தனையையும் ஆட்டிப்படைக்கின்ற ஆற்றலையும் வலிமையையும் பெற்றிருப்பது மனித உடல்தான்.

சிந்திக்கத் தெரிந்த, சிரிக்க முடிந்த, சீர்பட கருத்துக்களைப் பேசத் தெரிந்த, நிமிர்ந்து நிற்கவும் நடக்கவும் முடிந்த ஓரினம் மனித இனம் என்றாலும், மனிதனைப் பற்றிக் கூறும் பொழுது ‘மனிதன் என்பவன்