பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W. சொக்கலிங்கம் பிள்ளை 73

காவலாளியை விசாரித்து அதிகாரி ஊரிலிருப்பதை அறிந்து கொண்டோம். இரண்டு சாத்துக்குடி வாங்கிக் கையில் வைத்துக் கொண்டோம். சற்றேறக் குறைய முற்பகல் பத்தரை மணிக்கு வீராசாமி பத்தர் அலுவலகத்தில் நுழைவதைப் பார்த்தோம். பதினைந்து மணித்துளிகள் கழிந்த பிறகு இருவரும் பெயர்களை ஒரு தாளில் எழுதி உள்ளே அனுப்பினோம். அதிகாரி வருமாறு பணிக்கவே இருவரும் அலுவலகத்திற்குச் சென்று திரு பத்தருக்கு வணக்கம் தெரிவித்தோம். சுமார் ஏழு ஆண்டுகளாகத் திரு பத்தரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு இல்லாததால் மிக அன்புடன் உரையாடினோம். நான் துறையூரிலிருந்து காரைக்குடி வந்தபோதும், அதற்கு இரண்டு மூன்று ஆண்டுகட்கு முன்னரேயும் பத்தர் தஞ்சைக்குப் போய்விட்டதால் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. நான் கல்லூரியில் பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சியடைந்தார் பத்தர்.

பிறகு வந்த வேலையைக் குறித்துப் பேசினேன். சொக்கலி ங்கம்பிள்ளையை அறிமுகப்படுத்தி வைத்தேன். நாங்கள் 1940-41 சைதையில் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற நாள் முதல் நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுப் பேசினேன். எந்தத் தவறும் செய்யாமல் சிக்கல் ஏற்பட்டிருப்பது குறித்து விளக்கினேன். இதற்கு வருந்த வேண்டா என்றும், இம்மாதிரி தொல்லைகள் நேரிடுவது சர்வசாதாரணம் என்றும், இதனை எளிதாகச் சமாளிக்கலாம் என்றும். இதற்கரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார் பத்தர். பின்னர் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதும் கடிதம் பற்றியும் குறிப்புகள் தந்தார். பிறகு விடைபெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். அறையிலேயே கடிதத்தை நல்லமுறையில் தயாரித்தோம். மதுரையிலேயே அதனைத் தட்டச்சு செய்வித்து இராமநாத மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பினோம். இதன் நகல் மண்டலப் பள்ளிக் கல்வி ஆய்வாளர், கல்வி இயக்குநர் இவர்கட்கு அனுப்பப் பெற்றது. காரைக்குடிக்குத் திரும்பியதும் நகராண்மைக் கழக ஆணையருக்கு கடித நகல் ஆள் மூலம் அனுப்பப் பெற்றது. இவ்வாறு செய்தது எங்கட்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது.