உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை, பேசுங்கால்,
இச்சை பல சொல்லி இடித்து உண்கை: சிச்சீ!
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது.
உயிர் விடுகை சால உறும்.14

'சிவாயநம!' என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை; உபாயம்
இதுவே: மதி ஆகும்; அல்லாத எல்லாம்
விதியே மதி ஆய்விடும்.15

தண்ணீர் நில நலத்தால்: தக்கோர் குணம் கொடையால்;
கண்ணீர்மை மாறாக் கருணையால்; பெண் நீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதம் ஆம் என்றே அறி.16

செய் தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்,
எய்த வருமோ. இரு நிதியம்—'வையத்து
அறும் பாவம்' என்ன அறிந்து, அன்று இடார்க்கு, இன்று?
வெறும் பானை பொங்குமோ மேல்?17

பெற்றார், பிறந்தார். பெரு நாட்டார், பேர் உலகில்,
உற்றார், உகந்தார். என வேண்டார், மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்; இடாரே.
சரணம் கொடுத்தாலும் தாம்.18

சேவித்தும், சென்று இரந்தும், தெண் நீர்க்கடல் கடந்தும்,
பாவித்தும், பார் ஆண்டும், பாட்டு இசைத்தும், போவிப்பம்—
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்,
நாழி அரிசிக்கே நாம்.19

அம்மி துணை ஆக ஆறு இழிந்தவாறு ஒக்கும்.
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்; இம்மை
மறுமைக்கும் நன்று அன்று; மா நிதியம் போக்கி,
வெறுமைக்கு வித்து ஆய்விடும்.20

நீரும், நிழலும், நிலம் பொதியும் நெற்கட்டும்,
பேரும், புகழும், பெரு வாழ்வும், ஊரும்,
வரும் திருவும், வாழ்நாளும், வஞ்சம் இல்லார்க்கு என்றும்
தரும்—சிவந்த தாமரையாள்தான்.21

பாடு பட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து,
கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார்.
பாலிகாள்! அந்தப் பணம்?22