பக்கம்:நூறாசிரியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

நூறாசிரியம்

மனம் துய்ப்பு உணர்வைப் பெறாது. குழந்தைகளின் உள்ளம் நினைவலைகளை வாங்கவும், வெளிப்படுத்தவும் இயல்வதொன்றா யிருப்பினும் துய்ப்பு உணர்வற்ற நிலையில் இயங்கும். சிற்சிலகால் நாம் மகிழ்வூட்ட மகிழ்தலும், சினமூட்ட அழுங்குதலும் செய்வது யாங்கன் எனின், அது கருவிகளின் இயல்பூக்கத்தால் ஏற்படும் உந்து உணர்வு ஆகும் என்க.

இனி மனம் நினைவலைகளை வாங்குமிடத்து நெஞ்சம் என்றும், நினைவலைகளை வெளிப்படுத்துமிடத்து உள்ளம் என்றும், தன்னை நிலைப்படுத்திக் கொள்ளுமிடத்து மனம் என்றும் பெயர் பெறும். மனவலைகள் உள்ளத்தே மோதுறுமிடத்து நினைவு என்றும், மனவலைகள் உள்ளத்தினின்று வெளிப்படுமிடத்து உன்னல். எண்ணல் என்றும், நிலைப்பேறுறுமிடத்துக் கருதல், மன்னுதல் என்றும் பெயர் பெறும்.

இனி, மனமென்னும் அகவுறுப்பு உயிர்த் தொடக்கத்தே நெஞ்சமாக அலர்ந்து உள்ளமாக மலர்ந்து மனமாகப் புலரும் தன்மையது. அலர்தல்-மொக்கு, முகையாதல்; மலர்தல் விரிதல், மலர்ச்சி யுறுதல், புலர்தல் ஒளி பெறுதல், தெளிதல், இனி, நெஞ்சமாக வெளிப்பாடெய்திய மனம், நினைவு மிகமிக உள்ளமாக மலர்கிறதென்றும், உள்ளமாக மலர்ந்த பின்னரே நினைவலைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுகின்ற தென்றும், அவ்வாங்கு ஆற்றலும் போங்கு ஆற்றலும் வலிவுற்ற பின்னர் தான் புறவிளக்கம் நிறைவுற்று அகவிளக்கம் கால் கொள்ளும் என்றும், அது பின் நிறைவுற நிறைவுறத்தான் மனம் ஒளி பெற்றுத் தெளிவடையும் என்றும் கண்டு கொள்க.

இனி, முதற்கண் நெஞ்சு நினைவை வாங்குந் தன்மையதாக விளங்குமன்றி நினைவை வெளிப்படுத்தும் தன்மையதாக இராது. பெரும்பாலான மாந்தர் வாங்குகின்ற நெஞ்சினோரே. அவர்தம் நெஞ்சகத்துப் படிகின்ற நினைவலைகள் அவருடையனவல்ல. நினைவலைகளை எழுப்பவல்ல உள்ளம் கொண்டார்தம் அழுந்திய உணர்வால் எழுப்பப்பெற்ற, அலைகளாகும். இவ்வலைகளைத் தமக்குற்ற எண்ணங்களாகக் கொள்வர் அப்பேதையர். இவ்வாறு பிறர்தம் நினைவலைகளால் மோதுறப் பெற்ற நெஞ்சம் அவ்வலைகளினின்று பெறப்படும் அறிவுணர்வான் பற்றப்பெற்று வளர்ச்சியுற்றுத் தாமே அத்தகைய நினைவலைகளை வெளிப்படுத்தவல்ல ஆற்றலுறுகின்றது. அதுகாறும் நுழைவாயில் ஒன்றே திறக்கப் பெற்ற நெஞ்சத்திற்குப் பின்னர் வெளி வாயிலும் திறக்கப் பெறும் அவ்வின்ைப்பாடும் நிறைவுற்ற பின் உள்ளம் தன்னைத்தானே உள்நோக்கவல்லது. அக்கால் மனமென்னும் பெயர் பெற்று நிலைப்பேறு பெறும் இது தன்னை அகநோக்கிப் பார்க்குந் திறமுடையதாகலின் அகம் என்னும் சிறப்புப் பெயர் தாங்கப் பெற்றதென்க. இக்கால் மனம் குவிதலுறும். இதுவரை மனவுணர்வோடு அகன்று வளர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/100&oldid=1221515" இலிருந்து மீள்விக்கப்பட்டது