பக்கம்:நூறாசிரியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

77


முயற்சியாகக் கொள்ளப் பெற்றது. அறிவெனும் ஒரு கூட்டுணர்வு, புலன்களின் முனைப்புகளின்றே வெளிப்படுதலும், வளர்ச்சியுறுதலும் காண்க. புலன்கள் முனையப் பெறாதவிடத்து அறிவுணர்வு அவ் வழி மழுக்க முறுதலும் உய்த்துணர்க. புலன் உணர்வின் பற்றுதல் தன்மையே அறிவு முனைப்புக்கு வழியாதலின் அறிவுணர்ச்சி புலன் உணர்வின்றி அமையாதாம் என்க. இவ்விடத்துப் புலன்கள் தங்குமிடமாகிய பொறிகளைக் கூறாது புலன்களைக் குறிப்பிட்டதென்னை யெனின், பொறிகள் பழுது படுகின்ற விடத்தும் அவ்விடத்துப் புலன் உணர்வு ஊன்றி நிற்குமாகலின் என்க.என்னை? பொறியிலாவிடத்துப் புலன் உணர்வு கூடுமோவெனில், கூடுமென்றும், ஆனால் அவ்வுணர்வு உடலின் மற்றைய பொறிகளின்வழிச் செயற்பாடு கொள்ளும் என்றும் உணர்க.

இனி, இவ்வறிவென்னும் ஏரைக் கட்டியிழுக்கும் இரு வகை முயற்சிகளும் இரண்டு எருதுகளாக உருவகிக்கப் பெற்றுள்ளன. முயல்வும், துணிவும் இணைந்த இரண்டு எருதுகளாக முன்னின்று அறிவியக்கத்தைச் செய்யும் பான்மையை ஒர்ந்து உணர்க. உடல் முயன்றாலன்றி அறிவு முனையாது, அறிவுப் புலன்கள் ஊன்றினாலன்றி இயங்காது என்பது இவ்வடிகளால் உணர்த்தப் பெறும் உண்மை.

இனி, உடல் முயற்சிக்குத் துணை போவது துணிவு என்க. வேட்கையுள்ள அறிவு அங்காந்து நிற்கும். பொறிகளைத் திருப்பிப் புலன்களை ஊன்றுவிக்கும் உடல் முயலும் முயற்சிக்குத் துணிவு துணை நிற்கும் என்பதாம்.துணிவின்றி முயற்சி சிற்சிலகால் தடைப்பட்டுப் போகும். எனவே தான் இரண்டும் ஒருமித்து நடையிட வேண்டி எருதுகளாக உருவகம் பெற்றன.

வைகலும் உழுது என்பது ஒவ்வொரு நாளும், நாளுக்குரிய பொழுதும் இடையறாது உழுது என்றபடி வைகுதல்-ஏகுதல், இருத்தல், எதிர்தல் ஆகிய பொழுதின் முந்நிலைகளையும் உணர்த்தும் ஒர் அரிய சொல். வைகல்கழிந்த பொழுது கழியும் பொழுது-கழிய வரும் பொழுது எனும் முப் பொருளும் படும். படவே எப்பொழுதும் எனப் பொருள் பெறும் நாளும் என்பதற்கும் எந்நாளும் என்றே பொருளாம். எனவே வைகலும் உழுது என்பதற்கு ஒவ்வொரு கழிகின்ற நொடியும், பொழுதும், நாளும் உழுது என்பது பொருளாம். உழுதல் தொழில் இடையறாது நடைபெறல் வேண்டும் என்பது குறிக்கப் பெற்றது. பயிருழவுக்குப் பொழுது வேண்டுவதுபோல் அறிவுழவுக்கும் பொழுது வேண்டும் என்பதும், அதற்கு முப்பொழுதும் உரியதாம் என்பதும் கூறப் பெற்றன.

கற்பு நீர் பாய்ச்சி - கல்வி என்னும் நீரைப் பாய்ச்சி நெஞ்ச நிலத்தில் ஊன்றப் பெற்ற நினைவு என்னும் வித்திற்குக் கல்வி என்னும் நீரைப் பாய்ச்சுதல் வேண்டும், என்பது கல்வி நீராலன்றி ஊன்றப் பெற்ற வித்து வளர்தற் கியலாதாகலின் அது பாய்ச்சப் பெறுதல் இன்றியமையாதாம் என்க. கற்பு-கல்வி, மனத்தின் வாங்கு ஆற்றலையே நினைவு என்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/103&oldid=1181876" இலிருந்து மீள்விக்கப்பட்டது