பக்கம்:நூறாசிரியம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

135


‘நீயும், அவன் தனியொருவன் இக்கால் விரும்பியவள் போல் வெறும் புறமயக்கிற் குற்றவள் அல்லள். அவனாலும் அவன் பெற்றோராலும், நின் பெற்றோராலும் எற்றுக் கொள்ளப் பெற்றவள். அத்தகைய பெருமையுற்றது நின் மனம். எனவே அவன் புறவொழுக்கத்தை அவன் பெற்றோரா நின் பெற்றோரா ஏற்றுக் கொள்ளார். ஆகவே நீயே அவனுக்கு நிலையானவள். அதனால் ஆற்றியிரு’ - என்று தோழி தேற்றுவாள்.

அற்றை நன்னாள் நினைவு கொளக் கூர்மதி - மணவினை நிகழ்ந்த அந்த இனிய நல்ல நாளை நினைவு கொண்டு ஆற்றியிருப்பாயாக.

‘அவன் நின்னைப்பிரிந்து புறத்தே ஒழுகிய துன்பந்தரும் இக்கொடிய நாட்களை நினைவு கூராதே! நின்னொடு அவன் வந்து பொருந்திய அந்த நல்ல நாளை நினைத்திடு. அதுதான் நீ என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய இனிய நாளாம். அது தான் அவன்பால் நினக்குள்ள உரிமையினையும் வலிந்த பிணைப்பினையும் உறுதிபடுத்திக் கொள்ளும் நாளாகும். எனவே அதனை 'நினை' என்றாள் என்க.

ஒற்றைத் தனியை அல்லை - நீ தனியொருத்தி அல்லை. நீ தனித்திருக்கின்றாய் என்று கருதிக் கொள்ளாதே. அவன் நின் பால் தொடர்பு கொண்டிருந்த பயனால் ஒர் இளமகன் நினக்குத் துணையாக உள்ளதை மறவாதே!

நின் அழுங்கல் கொளல் சிறிது மின்றி- நின் துயரத்தை ஒரு சிறிதும் கொள்ளுதல் இல்லாமல்,

‘நீ நின் கணவன் பிரிவால் துன்பப்படுதல் போல், அவன் தன் தந்தையின் பிரிவால் துன்புறுதல் சிறிதும் இன்றி, நின் துணையால் அவன் மகிழ்ந்திருத்தல் போல், அவனது துணையால் நீ மகிழ்ந்திரு' என்று அவன் மகனைக் காட்டி ஆற்றினாள் என்க.

கொழுஞ்சுவை வழுக்கை யுறிஞ்சிய முக்கட் கூந்தை - கொழுவிய சுவையை உடையதும், வழுக்கை போல்வது மாகிய நுங்கையுறிஞ்சி யெடுத்த மூன்று கண்களையுடைய பனங்காயை.

கழைநுதி பொருத்தி - மூங்கிற் கழையின் நுனியிலே பொருத்தியவாறு.

உருள் கொடு வலம் தர - உருட்டிக் கொண்டு சுற்றி வர.

'நீ நின் கணவனைப் பிரிகிலை - அவனே நின்னை விட்டுப் பிரிந்தான்; அதுவும் பரத்தை ஒருத்தியின் தொடர்பு கொண்டு பிரிந்தான். எனவே நீ வருந்துவதற்கு என்ன பொருட்டு இருக்கின்றது ? வருந்தாதே! இதோ பார் நின் இளமகனை அவனை விட்டுப் பிரிந்த அவன் தந்தையைப் பற்றிக் கவலுறாது, அவனை விட்டு நீங்காத நின்னால் மகிழ்ந்து, கொழுவிய சுவையையுடைய நுங்கை உறிஞ்சிவிட்டுப் பிறர் எறிந்த பனங்காயை ஒரு