பக்கம்:நூறாசிரியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155 நூறாசிரியம்

பெறுவனவே பிற உணர்வுகளும். இனி, இறையுண்மையோ இவை யாவற்றையும் கொண்டு தெளியப் பெறுவதாகும். இவற்றுள் ஒன்று முரணுற்றாலும் அவ்வுண்மை சரிவரத் தெளியப் பெறாது போம். இனி, இவை துலங்கத் துலங்க இவற்றின் அடிப்பற்றியதாய மனமும் அறிவும் அகன்மையும் நீட்சியும் அடையப் பெற்று அவ்விறையுண்மையை மேன்மேலுந் துலங்கச் செய்வதும், அவை மழுங்க மழுங்க அவ்வுண்மையும் மழுக்கலுறுவதும் தன்னறிவான் கண்டு கொள்க.

இனி, இவ்வுலக அறிவுணர்வெல்லாம் ஒருயிர்க்கு இருவழிப் புலப்பாடுடையது. தன்வழித் தானறிதலும் பிறர்வழித் தானறிதலுமாகும். தன் வழித் தானறிதல் என்பது தனக்குற்ற கருவி கரணங்களால் தானே யறிதல்; பிறர் வழித் தானறிதல் என்பது பிறர்க்குற்ற கருவி காரணங்களால் அறியப் பெற்றவற்றை அவர்வழிக் கேட்டுத் தானறிந்து கொள்வது. உலகியலறிவு யாவும் ஒருவன் தன்வழித் தானே யறிதல் இயலாது. இனி, பிறர் வழித் தானறிதலும் ஒரளவே என்க. இனி, இவ்விருவகையானும் அறியப் பெறும் அறிவு பலவாயிருக்க இறையறிவு தன்வழித் தானறிதலில் தலையாயதென்க. அறிதலினும் தெளிதல் நுண்மை யுடைத்தாதல் பற்றித் தெளிவு எனலாயிற்று.

உண்மை - உள்ளமை. உள்ளதாந்தன்மை,

அவன்றிறல் மேற்றே அண்டம் - அவ்விறைப் பொருளின் திறத்தே அணுவும் அண்டமும் மேற்று மேலது. வழியது. அடிப்படையானது.

அண்டம் - அணுக்கள், அண்டியது அண்டம்.

அண்ணியது - சுருங்கியது.குறுகியது. விரிவின் சுருக்கம்- அணு.

அணுக்கள் - நெருங்கினது அண்டம்.

அவிழ்தலும் குவிதலும் அரிது மற்றறிவே! மற்று, மலர்தலையும் ஒடுங்குதலையும் அறிவது அரிது; இயலாதது. அண்ட இடை நிகழ்வின் ஒரு சிறு கூறுபாட்டைக் கூடச் சரிவர உணரமுடியாத நாம் அதன் மலர்ச்சியையும் அழிவையும் அறியமுடியாது.

அவிழ்தல் - கட்டுக்குள் இருந்து நெகிழ்தல் - விரிதல் - மலர்ச்சியுறுதல்

குவிதல் - கட்டுக்குள் ஒடுங்குதல் - ஒன்று கூடுதல்.

இப்பாடல், இறைப்பொருளின் இருப்பு நிலைபற்றித் தெளியவிலாதார்க்கும் தெளிந்தார்ப் போலப் பிதற்றுநர்க்கும் உலகியல் கூறி, அறிவின் தன்மையும் அறியப்பெறும் பொருளின் நுண்மையும் புலப்படுத்துவதாகும்.

இது பொதுவியலென் திணையும் முதுமொழிக் காஞ்சியென் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/181&oldid=1220667" இலிருந்து மீள்விக்கப்பட்டது