பக்கம்:நூறாசிரியம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

183

இசைபெறும் கல்வியுடன் திரும்பி வருவதைவிட வசை தராத ஒழுக்கத்துடன் வருவதைத்தான் நான் மிகுதியும் விரும்புகின்றேன். அவ்வாறு ஒரு வேலை ஒழுக்கமுடன் திரும்பி வராத சூழ்நிலை உனக்கு வருமானால் இங்கு வராமல் அங்கேயே மாய்ந்து போதல் நல்லது” என்று உறுதிப்படப் பேசினார் என்க.

தசைபெறல் அன்றே வாழ்க்கை - உடலுக்கு ஊன் அமையப் பெறுதலன்று வாழ்க்கை.

தசையுடன் ... சிறப்பென்றோரே! - உடல், தசை வரப்பெறுதலன்று வாழ்க்கை என்றவர், மீண்டுத் தசையுடன்... என்று தொடங்குவதால் நல்ல உடலும் வேண்டும் என்றார். ஆனால் அந்த நல்ல உடலுடன் அறிவும் உள்ள உணர்வும் வேண்டும் என்றார். இனி, அவற்றுடன், அவையெல்லாவற்றையும் ஒளிபெறச் செய்யும் உண்மையும் வேண்டும் என்றார். இவையனைத்தும் நிறைந்து நிற்கும் உடல்தான் நல்லுடல் என்றும், அவ்வுடலைத் தாங்கும் உயிர்தான் நல்லுயிர் என்றும், அதுதான் அவ்வுடலைப் பெற்ற அவ்வுயிர்க்குச் சிறப்பு என்றும் கூறுகின்றார் என்க.

இனி, உயிருண்மையும், உயிர்த் தன்மையும் உயிரியக்க முறையும், அவ்வுயிர் உலகொடு பொருந்தி உடலெடுக்கும் பான்மையும், எம் உலகியல் நூறின், மெய்யதிகாரத்தில் கண்டு தெளிக.

உண்கையும்...கல்வி - உண்பனவற்றையும், உடுப்பனவற்றையும் வாழ்க்கைக்குற்ற பிற பொருள்களையும் பெறுகின்ற வழி முறைகளைக் கற்றுக் கொள்வதற்கன்று, கல்வி.

இப்பாட்டின் கருப்பொருளே இவ் விறுதி மூன்றடிகளில்தான் அடங்கியுள்ளது.

“கல்வி என்பது உண்பதற்கும் உடுப்பதற்கும் வாழ்வதற்கும் உரிய பொருள்களைப் பெறுவதற்குரிய அறிவு என்று கூறும் பொருளியல் கருத்தினாரை மறுத்துக் கூறியதாகும் இக்கூற்று. அவற்றைக் கற்பது கல்வியாகாது. அது தெரிந்து கொள்ளுதல் learning என்பதே ஆகும். கல்வி என்பது வேறு. தெரிந்து கொள்ளுதல் வேறு.

ஆங்கிலத்தில் கல்வி என்பதற்குரிய நேரிய சொல் Education என்பது. Education என்பதற்கு development of character or mental Power என்பதே பொருள்.

எனவே, Education (கல்வி என்பது) வேறு; Learning (தெரிந்து கொள்ளுதல் என்பது) வேறு.

கல்வி என்னும் தூய தமிழ்ச்சொல் தோண்டுதல் என்று பொருள்படும் உயர்ந்த சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/209&oldid=1208936" இலிருந்து மீள்விக்கப்பட்டது