பக்கம்:நூறாசிரியம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

194

பயன்களுள்ளும் பிறர்க்கெனப் போய்ச் சேர்கின்றவை மிகச் சிலவாம் என்க: அங்ஙன் அவர்ப் பொருட்டாய்ப் போய்ச் சேரும் பயன் நிலைகளுள், அவர்கள் தம் பொருட்டாய்த் தேர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் நிலைகளே மிகச்சிலவே என்க. அவ்வாறு தம் பொருட்டாகவும் தேர்வுற்று விளங்கித் தோன்றும் வினை நிலைகளுள், காலத்தானும் இடத்தானும் அழிவுறாது நின்று புகழப் பெறுவன மிகமிகச் சிலவேயாம் என்க. அவ்வாறு புகழ் பெறத்தக்க வினைகளைத் தரும் உயிர்களோ இவ்வுலகத்து ஒரு சிலவே என்க. அச்சிலவுயிர்களுள்ளும் அவை ஈண்டு உயிர்க்கின்ற வரை உறவு கொள்ளும் உடல்களைப் பெறுவன சில என்க. ஆனால், அவ்வாறின்றி, அவ்வுயிர் இங்குமோ வேறெங்குமோ நின்று இயங்குகையில் அவ்வுயிரோடும் பொருந்திய உயிராக நின்று, ஒன்றி உறையுந்தன்மை வாய்ந்த உயிர்கள் மிகமிகவும் சிலவாம் என்னும் இவ்வரிய உண்மைகளை அவர் தேர்ந்து தெளிந்தார் ஆகலின், எம்மின் குழலை மோந்தவர், அக்குழலுக்குரிய எம்மையும் , யாம் வதியும் இக்குன்றையும் என்றும் மறந்துபட மாட்டார் (விரைவில் வருவார்) என்க.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்து, அவன் வரவு குறித்து ஐயுற்ற தோழிக்குத் தலைவி, உயிரின் உணர்வு நிலைகள் உணர்த்தித் தன்னொடும் தொடர்புற்ற அவன், வெறும் உடல் உறவினன் அல்லன், உயிருற்வினன்; எனவே தன் குழலை மோந்த உணர்வு நிலைப்பட்டு நிற்கக், காலமும் இடனும் மறவாது வினைமுடித்து உறுதியின் வருவான் என்றது.

உறக்கம் - புறப்புலன்களும் புறமனமும் ஒடுங்கி அடிமனம் ஒன்றே உணர்வினதாகக் கொள்கின்ற அழுந்திய துயில். இந்நிலையைச் சுழுத்தி என்பர் சிவமெய்ந்நூலார். இது கனவு நிலையினும் ஆழ்ந்த ஒடுக்கம் உடையது.

இதன் அடுத்த படிநிலைகளாய பேருறக்கமும் (துரியம்) உயிர்ப் படக்கமும் (துரியதீதம்) மெய்யுணர்வினார்க்கே வாய்ப்பனவாகிய மிகு உணர்வுறக்க நிலைகளாகலின் அவற்றை ஈண்டுக்குறித்திலள் என்க.

உறக்கத்து எழுந்து - புறப்புலனும் புறமனமும் ஒடுங்கிய அவ்வாழ்ந்த உறக்கத்து, அறிவொடு தொடர்பறுந்த அவ்வடிமனத்து விருப்பந்தவிர்த்து, (முன்னைய பிறவிப் படிநிலை வளர்ச்சியான் கிளர்ந்து) உள்நின்ற உயிருணர்வான் எழுந்து தோன்றி.

புற அறிவுத் தொடர்பறுந்த நிலையிற் செயற்படுவது உயிருணர்வொடு பொருந்திய உண்மையறிவாம் என்க. என்னை? 'நுண்ணிய நூல்பல கற்பினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/220&oldid=1208999" இலிருந்து மீள்விக்கப்பட்டது