பக்கம்:நூறாசிரியம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

215

நூறாசிரியம்

இழிநோக்கு ... இணைவிழி - சாதி வேறுபாட்டின் இழிவான நோக்கத்தை எரித்துத் தீய்த்தது, தீயை உமிழும் நின் கண் இணைகள்.

தான் கொண்ட காதலில் வெற்றி பெற்றுக் கலப்பு மணம் புணர்ந்து கொண்டாளாதலின், அச்சாதி வேறுபாட்டை நிலை குலையும்படியும், மிதித்துச் சிதைவுறுமாறும், எரித்துத் தீய்க்கவும் செய்தாள் என்க,

பழிபற....நெஞ்சம் - குலத்தால் வேறுபட்ட இருவரும் மனம் ஒன்றிக், கொண்ட காதல் நிறைவேறாது பொய்க்கும் என்று சாதியுணர்வினார் பேசிய பழிச்சொல்லை இல்லாமற் போகும்படி துடைத்தல் செய்தது, பண்புற்ற நின் நெஞ்சம்.

செங்கால் நாரையின் - சிவப்பு நிறக் கால்களை உடைய் நாரையைப் போல்.

தூங்கியிலிருந்து - மனம் பதறாமல் காலம் பொருந்தும் வரை அமைந்திருந்து. ‘தூங்குக தூங்கிச் செயற்பால' என்றாராகலின்.

நூங்குறி பற்றினை - நுன் குறியாகிய நின் காதலனைக் கைப்பற்றிக் கொண்டனை.

மருட்கை உன் துணிவே - இந்த உன் துணிவு வியப்புடையது.

சான்றவர்....நெஞ்சம் - சான்றோர் மருங்கில் பொருந்தி, அவர்தம் நோக்கினும் போக்கினும் கருத்துக் கொண்ட உள்ளமும்,

தோன்றுயர்....உணர்வும் - உள்ளத்தே தோன்றுகின்ற உயர்ந்த உணர்வின் அடிப்படையாக மலர்ந்த வினைகளில் கட்டப் பெற்றுத் தொங்கிய உள்ளமும்.

தாழ்வறப் பெற்றோன்தடந்தோள் - தாழ்வில்லாமல் அமையப் பெற்றவனின் பருத்த தோளை.

வாழ்வெனப் பற்றி - இதுவே நமக்குற்ற வாழ்வு என இறுகப்பற்றி.

வரைந்தனை கொண்டே - அவனை மணந்து கொண்டனை நீயே!

தோழியே! இதனைக் கேட்க! நீ என்றும் வாழ்வாயாக; நின் காதல் இவ்வுலகினும் பெரியது; பொழிந்த விசும்புபோல் தூயது; கதிர் போல் செப்பமானது; மணிபோல் உறுதியானது; பனிபோல் குளிர்மையானது; அறவோர் நெஞ்சைவிட அகன்றது; முறைப்படத் துறந்தோர் உள்ளத்தை விடத் திண்ணியது; மறவன் கை அம்பைவிடக் கூர்மையானது; அவன் இலக்கை விட நேரானது; புலவரின் கற்பனை மடுவைவிட ஆழமானது: கொடை சான்ற உள்ளத்தை விடக் கனிந்தது; யானையை எதிர்த்துப் போரிட்டு வீழ்த்திய புலியைப் பார்க்கினும் துணிவு கொண்டது; நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/241&oldid=1209069" இலிருந்து மீள்விக்கப்பட்டது