பக்கம்:நூறாசிரியம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

229

செய்யுட் கருவினார் - புலவர்கள், தாம் புலனெறிச் செய்யுள்கள் யாத்தற்குரிய உட்கருவாகும் தகுதியுடைய பெருமக்கள்.

தோன்றுநாள் வரையே- தோன்றுகின்ற நாள் வரைக்கும். செய்யுட் கருவினார் தோன்றுநாள் வரையே, யாவர்ப் பாடுகம் கொல்லோ என்று அடிமுடி கூட்டுக.

‘இன்றுள்ள நிலைகள் மாறி மக்கள் கூட்டமும் நன்னிலை பெற்று உயர்ந்த தன்மைகளைப் பெறும் சிறந்த மக்கள் தோன்றும் வரை யாரைப் பெருமையுறப் பாடுவது’ என்று அழுங்குகின்றது புலவர் நெஞ்சம்.

‘முக்கழகம் நிறுவிய சான்றோர் போல்வரும் இன்றிலர் , அரசுகளும் இல்லை; எனவே வெற்றி தோல்விகளுக்கும் இன்று இடமில்லை : இரவலர்க்கு ஈயும் புரவலர்களும் இல்லை ஈயினும் நன்றி நினைக்கும் நல்ல பண்பினாரும் இலர் கல்வியில் சிறந்த நல்லறிவாளரும் இன்றிலர் உள்ளச் செழுமை வாய்ந்த உயர்ந்தோரும் இலர்; ஊருக்காக உழைக்கும் பொதுநலங் கருதும் குடிசெய்வாரும் இலர் இவர்கள் இல்லாத நிலை ஒருபுறத்து உளதாக இருக்கின்றவர் எல்லாரும் கள்ளத்தை முதலாகக் கொண்டு களவை ஊதியமாகப் பெறுதற்குப் பொய்யையே வாணிகமாக நடத்திப் போலி வாழ்க்கை வாழ்பவராக உள்ளனரே. இவருள் எவரைப் பாடலுக்குக் கருவாகக் கொண்டு பாடல்கள் செய்வது? எனவே, உயர்ந்த புலனெறிச் செய்யுளுக்கு இலக்கணமாக விளங்கிப்பாடுகின்ற உணர்வையெழுப்புதற்குக் கருவாக நிற்கும் பெருந்தகையினார் இங்குத் தோன்றுகின்ற வரை எவரையும் பாடுதற்கு இயலாது’ என்று, புலமைமிகு நெஞ்சம் உள்ளழுங்குவதாக அமைந்ததிப்பாடல் என்க.

இது, பொதுவியல் என் திணையும், புலனெறி அழுங்கல் என்னுந் துறையுமென்க. புலமை வெளிப்பாட்டுக்குரிய நெறி பற்றி வருந்திக் கூறுவதாகலின் புலனெறி அழுங்கல் என்னும் புதுத்துறை வேண்டுவதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/255&oldid=1209143" இலிருந்து மீள்விக்கப்பட்டது