பக்கம்:நூறாசிரியம்.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

247

வகை ஆவன இவையிவை யென்றும், தேட்டமிலார்க்குத் தெளிவுறுமாறு காட்டி நின்ற ஐந்துறுப்பிலக்கணம் என்க. என்றதன்பின் , நின்று நிலவிய அன்றைய நற்றமிழ், இயல்பின் இயங்கும் உரைபெறு கட்டுரை, மயல் தவிர் பொருளொடு மல்கிய இயலும் ஒலியொடு வெழுத்தும், எழுத்தொடு சொல்லும், சொல்லொடு பொருளும், பொருளொடு பண்ணும், பண்ணொடு தாளமும், தாளத்தோடு இசையும் ஆலத்தோன்றி, கிளப்போரையும் கேட்போரையும் உளத்தாலும் உவகை முதலிய உணர்வுகளாலும் பிணிப்பிக்கும் இசையும், இவ்விசையும் இயலும் அசைவுறாநின்று, உடலோடிய உணர்வையும், உணர்வோடிய சுவைகளையும் ஒரு நன்னெறிக்கண் கட்டி நிறுத்தி, உளத்தையும் உரனையும் வளத்தகப் படுத்தும் நாடகமென்னும் பூடக அமைப்பும், கொண்டு தழுவித் தொன்று தொட்டு, காலத்துக் காலத்து, இடத்து இடத்து, சழக்கு நிலைமிக்கு வழக்குத் திரியினும் புழக்கு தமிழ் தோற்றத்துப் பொலிவுற நிற்கும் மூவா இளமை முத்தமிழ் என்க.

காத்தோர் நிரலின் இத்தகு பெருமை பெறுமாறு நின்ற தமிழை, நினைவு, மொழி, மெய் என்னும் மூவுரத்தானும் காத்தல் வினையாற்றுவோர் வரிசையின்.

தலைநின்றனனே முதலிடத்து வைத்து எண்ணிப் பெறுமாறு இருந்தனன்.

மொய்ம்பொடு - நிறைந்த வலிமையொடு.

முதலாவம்மென் நோக்கின்-தன்னைச் சார்ந்த அனைத்து மாணவரினும் முதலாமவனாக வருக என்னும் நோக்கத்துடன் .

ஐயுற்றுறந்த செல்வத் தனிமகன்- தந்தையைத் துறந்த உடன் பிறப்பற்ற ஒரு தனிமகனை.

கல்விக் கழகத்துச் சேர்த்தினை அம்ம- கல்வி பயிலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கொண்டு சேர்த்தினை.

வெய்குழல் எஃகம் உமிழ்ந்து- வெம்மையான வேட்டெஃகத் தினின்று உமிழப் பெற்ற குண்டினால்,

உயிர்கழன்ற மெய்யோன்- - உயிர் நீங்கப்பெற் உடலையுடையவன்.

தமிழ்ச்சீர் மீமிசை நிறுத்தி தமிழ் மொழியின் பெருமையை மிக உயரத்தில் கொண்டு சேர்த்தி மேலும் பெருமைப் படுத்தி.

என்னை, தமிழ் மொழி வழங்கும் நிலத்தில், வேற்று மொழியாகிய இந்தி மொழி ஆளுமைக்கு வருவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் போராடி, அப்போராட்டத்தில் தன்னைக் காவாகத் தந்து, அப் பிறமொழி ஆளுமை முயற்சியை முறியடித்து, அதனால் தமிழுக்குத் தேடிய பெருமை. அஃது இழிவை எதிர்த்துப் பெற்றதாகலின் முன்னின்ற பெருமையினும் மிகுந்த பெருமை என்க.