பக்கம்:நூறாசிரியம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
53 மறல்கொடு நெஞ்சின் மாமகன்


ஆற்றிலம் என்றே அழுங்கினர் சான்றோர்!
நோற்றிலம் என்றே நொந்தனர் முதியோர்!
பெற்றிலம் என்றே ஆடவர் புலம்பினர்!
தாயர் ஆகிலம் என்றனர் தாயர்!
உடப்பிறந் திலமே என்மார் இளையோர்! 5
படற்கிலம் நோக்கெனப் பாவையர் கலங்கினர்:
முந்தினம் அலமென நைந்தனர் உழையோர்!
பிந்தினம் அலமெனக் காவலர் பிதற்றினர்!
முதிராச் சிறுமொழி முனிந்து முத்தமிழ்க்
கதிரெரி எஃகம் அணிமுன் னின்று10
மறல்கொடு நெஞ்சின் மாமகன்
விறல்பெறத் தாங்கி வீழ்ந்த ஞான்றே!

பொழிப்பு :

(இத்தகு வீறு பொருந்திய மறச்செயலை நாம் நம் வாணாளில்) ஆற்றிலமே என்று உள்ளம் வருந்தினர் நன்று எண்ணி நல்லனவே செய்யும் அறிஞர்; (இது போலும் வீரனை நாம் மகனாகப் பெறுதற்கு நாம் நோன்பு) நோற்ற திலமே என்று எண்ணி நோகலுற்றனர், முதியவர்கள்; இவனனைய ஒர் ஆண்மகனை யாம் பெற்றிருக்கவில்லையே என்று) ஆடவர்கள் வாயரற்றிப் புலம்பினர்; (இவனனைய ஒரு மறவனுக்கு) நாம் தாயராக வில்லையே என்று கூறினர்,தாய்மார் பலர் (இவன் போலும் ஒருவனொடும்) நாம் ஒரு வயிற்றில் பிறக்கவில்லையே என்று இளைஞர்கள் உரைத்தனர் : (இவனைப் போலும் ஒருவனின்) கண்களில் நாம் படவும் காதலுறவும் வாய்ப்பிலையே என்று இளநங்கையர் மனம் வருந்தினர்; (இவன் செய்தது போலும் ஒரு மறச் செயலைச் செய்தற்கு நாம்) முந்திக் கொண்டோம் இலமே என்று இவன் நண்பர்கள் உள்ளம் துயருற்றனர்; (ஐயகோ, நம் வேட்டெஃகத்தால் வெடியுண்டு இவன் மாய்ந்திடாதவாறு) நாம் நம் செயலில் சிறிது பிந்திக் கொண்டோம் இலையே என்று (இவனைச் சுட்ட) காவலர் மாறுமொழி கூறி வாய் பிதற்றினர்; அண்மையில் தோன்றி, இலக்க்ண இலக்கியங்களால் முற்றி முதிர்ச்சியுறரத் சிறுமை மொழியாகிய இந்தியை-அதன் திணிப்பைப் பொறுத்துக் கொள்ளாமல், சினங்கொண்டு, முத்தமிழ் நலனுக்காக, தீக்கதிர்களை உமிழ்கின்ற வேட்டெஃகம்(துமுக்கிகள்) சூழ வைத்த காவலர்களின் முன்னர் அஞ்சாமல் எதிரேறி நின்று;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/275&oldid=1221137" இலிருந்து மீள்விக்கப்பட்டது