பக்கம்:நூறாசிரியம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

293

எழுப்புகின்றவர்களின் சிரிப்பொலிக்காகவும் ஆடவில்லை. தன்னை அவ்வாறெல்லாம் பழக்கி, ஆட்டுவிக்கின்ற தன் தலைவனிடம் இருக்கிற கைக்கோலுக்காகவே அதைத் தாண்டியும் அதை வைத்துக் கொண்டு சுழன்றும் அவன் விரும்பிய வாறெல்லாம் எல்லாரும் காணத்தகுந்த மகிழ்வான நடனத்தை ஆடிக் காட்டுகின்றது.

தானும் அப்படித்தான்; தன் தலைவன் தன்னை அன்பால் பழக்கிக் காதல் என்னும் உணர்வால் ஆட்டுவிக்கின்றான். எனவே தன் தாய் தன்னிடம் நயமாக உரைக்கும் பிற உரைகளுக்கோ, அவர்கள் தனக்கு உணவும் உடையும் தந்து மகிழ்ந்து புரக்கின்ற அன்புணர்வுக்கோ தான் கட்டுப்படவியலவில்லை. என்று தோழியிடம் தன் தலைவனிடம் தனக்குள்ள ஆழமான காதலை உணர்த்திக் கூறியதாகும் இப்பாடல்.

காசிற்கில்லை கந்தற்கு இல்லை - குரங்காட்டியின் கையிலுள்ள குரங்கு மக்கள் கொடுக்கும் காசுக்கோ, அல்லது அவர்கள் கொடுக்கும் கந்தல் துணிக்கோ ஆடுவதில்லை.

அதுபோல் தானும், தன் பெற்றோரோ அல்லது தன்னை மணம் செய்து கொள்ள விரும்புவான் வேண்டி வருவோனோ தனக்குப் பொருள் நலமும் உடைநலமும் கொடுப்பினும், தன் உள்ளம் அவற்றை நாடி அவர்களுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதில்லை என்றாள் என்க.

மூகநர். இல்லை - குரங்காட்டத்தைப் பார்க்கக் கூடியிருப்பவர்களுள் இளையோர் தம் கைகளை மகிழ்ச்சியால் கொட்டி, வயிறுகள் வலிக்கும்படி சிரிக்கின்ற பேரொலிக்காகவும், அக்குரங்கு மகிழ்ந்தோ அரண்டோ ஆடவில்லை.

அதுபோல், தன் பெற்றோரும் மற்றோரும் தன் அகவையையும் அழகையும், நடைமுறைகளையும் பார்த்து மகிழ்ச்சியாலோ அன்றி இகழ்ச்சியாலோ, ஒருபுறம் பாராட்டவும்-மறுபுறம் அவர் தூற்றவும் செய்யினும், அவ்வாரவாரங்களக்காகவும் தான் அவர்கள் வழி நிற்கவும் இயலாது.

தகவுப் படுத்தும் தன்னைக் கோற்கு - அதனைப் பயிற்றி இயக்கும் குரங்காட்டியாகிய அதன் தலைவனின் கையில் உள்ள கோலுக்குஇசைந்தே

தாண்டியும்.ஆடும் - தாண்டவும் சுழலவும் ஆக அவன் விரும்பியபடியெல்லாம் ஆடுகின்ற.

காண்டகு குரக்கின் களிநடம் போல - காண்பதற்குகந்த குரங்கினது மகிழ்வான நடனத்தைப் போல.

என் ஜக்கு அல்லால், அன்னை நன்னய உரைக்கு - என் தலைவனின் அன்புரைக்கு அல்லாமல், என் தாயின் நன்மையும் நயன்மையும் சான்ற உரைக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/319&oldid=1209169" இலிருந்து மீள்விக்கப்பட்டது