பக்கம்:நூறாசிரியம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

நூறாசிரியம்

மன்னாது நெஞ்சு - பொருந்தாது என் நெஞ்சம்.

குரங்கானது, தன்னை ஆட்டுவிக்கும் தன் தலைவனது கையிலுள்ள கோலுக்கு இயைந்து நடப்பதைப் போல், யானும் என் தலைவனது காதல் உணர்வுக்குக் கட்டுண்டு நடக்கின்றேன் என்றாள்.

குரங்கைத் தகவுப் படுத்துவது அவனது கோல், அதுபோல் தலைவியைத் தகவுப்படுத்துவது அவனது காதலன்பு தகவுப் படுத்துதல், உடன்பட்டு ஒப்ப நடக்கச் செய்தல்.

கோலின் பொருட்டாக அக் குரங்கு தாண்டியும் சுழன்றும் களிநடம் பயில்வது போலத் தலைவியும் தலைவனின் காதற்பொருட்டாக, இல்லந்தாண்டிப் புறத்தே சென்றும், அன்பால் அவனைச் சுழல (சுற்றி) வந்தும், காதல் உணர்வால் களிப்புறக் களவு ஆடியும் வருகின்றதைத் தலைவி தோழிக்குக் குறிப்பாய் உணர்த்தினாள் என்க.

‘அன்னையின் உரை நல்லது நயமானது; எனினும் என் உள்ளத்தே அது பொருந்துவது இல்லை. குரங்கு தன்னைச் சுற்றியிருப்பவரின் மகிழ்வும் பாராட்டும் நிரம்பிய சிரிப்பொலிக்கு இயையாது தன் தலைவனின் கைக்கோலுக்கே ஆடுவதுபோல், நானும் என் தலைவனின் காதல் உணர்வாகிய கோலுக்கே இவ்வாறெல்லாம் நடக்க வேண்டி உள்ளது, என்றாள் தலைவி.

குரங்காட்டத்தைப் பார்த்துக் கூட்டத்தில் உள்ள இளவோர் கைகொட்டி நகைப்பது போலத் தன் காதல்-களவு நடவடிக்கைகளையும் தங்களின் அன்புணர்வை அறியாத மூடர் இழித்தும் பழித்தும் அவர் துாற்றுவதைக் குறிப்பாகவும், ஆனாலும் அதைத் தான் பொருட் படுத்தாததை உறுதியாகவும் உணர்த்தினாள் தலைவி என்க.

‘மன்னாது நெஞ்சம்’ என்ற தன் நெஞ்சம் தலைவனின் அன்பான காதலுணர்வுக்கு மட்டுமே அல்லாமல், பிறர் எவருடைய எவ்வுரையானாலும் அதற்குப் பொருந்தவும் பொருந்தாது, நிலைப்பாடும் எய்தாது என்றும் கூறினாள் என்க.

இனி குரங்கு தன் பெற்றோரையும் பிறந்தவிடத்தையும் விட்டு வெளியேறித் தன் தலைவனின் வாழ்வோடு பொருந்தி வாழ்வது போல், தானும் தன் பெற்றோரையும் பிறந்தவிடத்தையும் விட்டு வெளியேறித் தன் தலைவனோடு பொருந்தி வாழவிருக்கும் குறிப்பைத் தலைவி தோழிக்கு உணர்த்தி அறத்தொடு நின்றாள் என்க.

இப்பாடல் குறிஞ்சி என் திணையும் தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்றல்’ என் துறையும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/320&oldid=1209171" இலிருந்து மீள்விக்கப்பட்டது