பக்கம்:நூறாசிரியம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

295

66 ஈக மன்றோ ஈகம்



மானமும் உயிரும் வாழ்வும் கருதி
வானமும் நிலமும் நீரும் கடந்து
கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து
தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட

ஆயிரம் ஆயிரம் இளையரும் பெண்டிரும்

5

மாய்வதும் திரிவதும் ஆகிய நிலைகொள்

ஈழத் தமிழர் இடையினில் தோன்றிக்
காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை -
தன்னையும் இழந்து தமரையும் இழந்த

அன்னைக் குலத்தோர் அறங்கூர் மறத்தி

10

‘தானு'வென் பெயரினள் தன்னினம் அழித்த

வீணனுக் கெதிரா வெகுண்ட வெஞ்சினம்
நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு
ஒருதனி நின்றே ஊர்நடு சிதைத்த
ஈக மன்றோ ஈகம்
ஆகுமோ உலகவள் அழிவிலாப் புகழ்க்கே!

பொழிப்பு :

தன்னுடைய மானத்தையும் உயிரையும் வாழ்க்கையையும் காத்துக் கொள்ளக் கருதி, வானத்தையும் நிலத்தையும் நீரையும் கடந்து (வெளிநாடு ஏகியும், (அவ்வாறு ஏகவியலாதவர்கள் அங்கேயே உள்ள காடுகளில் புகுந்து (ஒளிந்து)ம் போராட்டக் களத்தில் (சிக்கிச்) சிதைந்தும் உயிரிழந்தும், அவரவரும், அவரவர் குடும்ப உறுப்பினர்களும், அவர்களின் இனமக்களும் இடர்கள் படுகின்ற, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்டிர்களும், மாண்டு போவதும், (ஊர் ஊராக, நாடு நாடாக ஏதிலிகளாகத்) திரிவதும் ஆகிய நிலைகளைக் கொண்டுள்ள ஈழத்தில் உள்ள தமிழர்களின் நடுவே பிறந்து தோன்றி, வயிரம் போன்ற (உறுதியான) நெஞ்சுடைய, கன்னிப் பருவத்தின் இளமை மொட்டுப் போன்றவளும், தன்னையும் (கற்பளவில்) இழந்தும்,தன் குடும்பத்தினரையும் உறவினரையும் சாவளவில் இழந்தும் விட்ட - தாய்மைக் குலத்தில் தோன்றிய அறவுணர்வு கூர்தலுற்று மறவுணர்வாய் நின்ற மறத்தியும்-ஆகிய தானு'என்னும் பெயரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/321&oldid=1209172" இலிருந்து மீள்விக்கப்பட்டது