பக்கம்:நூறாசிரியம்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

நூறாசிரியம்

மண்பொருட்கூட்டும் ..... அறிவர் - மண்முதலிய பருப்பொருட்களின் சேர்க்கையான உலகின் இயல்பும் நுண்பொருள்களான உயிர்களின் இயக்கமும் பற்றி ஆய்ந்து தெளிபொருள் உணர்ந்த திறவோரே மெய்யறிவர் எனப்படுவோராவர்.

சிலரைக் கல்லார் என்றும் மற்றுஞ் சிலரைப் பேதையர் என்றும் சுட்டியமையின் மற்று அறிவர் தாம் யாவர் என வினா எழுதலின் அது நோக்கி இவ்வாறு கூறினார்.

மண்பொருள் கூட்டு என்றது உலகத்தைக் குறித்தல்.

நிலம் நீர் தீவளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலக மாதலின்"- என்றலால் அறியப்படும்.

மண் முதலிய பருப்பொருள்கள் என்றது என்னை யெனின், பின்னையது நுண்பொருள் என்றமையின் என்க. மண்ணும் தீயும் நீரும் அல்லாத வளியும் வெளியும் பருப்பொருள்கள் அல்லவேனும் பூதங்களாதலின் அவ்வாறு சேர்த்துக் கூறப்பட்டது.

‘மண்பொருட் கூட்டு என்ற கலந்த மயக்கம்’ பற்றி விரிப்பிற் பெருகும்.

எண்பொருள் ஆய்ந்த தெளிபொருளாக அவற்றை ஆய்ந்து உணர்ந்த

உயிர்ப்பொருள் யாவும் ஒன்றொடு தொடரும் - உயிரிகளெல்லாம் ஒரறிவு முதல் ஆறறிவு ஈறான பாகுபாட்டை யுடையனவாகப் படிநிலை வளர்ச்சிபெற்றுத் தொடரும்.

ஒன்று- ஆறறிவின் முதலதான ஊறறிவு.

இனி, ஒன்று என ஆசிரியர் இந் நூறாசிரியத்தின் முதற்பாடலின்

தலைச் சொல்லாய் நின்ற இறையொடு ஒன்றித் தொடர்ந்து நிறைவுறும் எனினுமாம்.

மெய்ப்பொருள் அதன் அதன் மேலே தூங்கும் - மெய்ப்பொருள், உயிர்ப் பொருள் ஒவ்வொன்றின் மேலும் ஆளுமையால் பொருந்தி நிற்கும்.

பொய்ப்பொருள் மெய்யின் போலிகை - உலகத்துப் பொய்ப்பொருள் களெல்லாம் உண்மைப் பொருள்களின் போலி நிலைகளாம்.

பெயர் கட்டப்படும் பொருள்களெல்லாம் நிலைபொருள் இயங்கு பொருள் எனவும், காட்சிப் பொருள் கருத்துப் பொருள் எனவும், நுண்பொருள் பருப்பொருள் எனவும், இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் எனவும், பிறவாறும் அமைந்த உண்மைப் பொருள்களே யாம். ஆதலின் பொய்ப்பொருள் என்பது ஏதுமில்லை. இல்லையாயின் பொய்ப்பொருள் எனப்படுவதுதான் என்னை யெனின் உண்மைப் பொருள்போல் புனையப்படுவனவேயன்றி வேறில்லை யென்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/442&oldid=1223969" இலிருந்து மீள்விக்கப்பட்டது