உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

417


உய்பொருள் அவை அவை அறிந்து - அவ்வாறு பல்வகைப்படத் தோற்று விக்கப்பட்ட பொருள்களான அவ்வவற்றின் இயல்புகளை அறிந்துணர்ந்து.

அவையவை என்றது. அவைதாம் பற்பல வகைப்படுதல் நோக்கி. உய்பொருளாவது தோற்றுவிக்கப்பட்ட பொருள். உய் - செலுத்துதல்; பிறப்பித்தல்.

அவை.உழை போவாரே - அவற்றினிடத்துத் தொடர்புகொண்டு இயங்குவோரே

போவார் என்பது, இயங்குவார் என்னும் பொருட்டு. அதாவது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உதவியுந் துணையுமாய் நின்று வாழ்வித்து வாழ்வோர் என்பது.

உழை இடத்து ஏழனுருபு

துய்ப்போர் ஆகுநர்-மெய்ந்நிலை நின்று உலக வாழ்க்கையை நுகர்வோர் ஆவர்.

துய்ப்போர் - இறைமையில் தோய்ந்து வாழ்வோர்.

துவ்வார் ஆகுநர் நலி பிறப்பானே நைவார் - உலக வாழ்க்கையை மேற்கண்டாங்கு நுகராதார் பிறவியின் பயனை அறியாத நிலையான் வருந்துவோர்

நவி பிறப்பாவது மாந்தனாய்ப் பிறந்தும் இறைமையில் தோய்ந்து வாழும் மெய்ந்நெறியறியாதார்.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/443&oldid=1223985" இலிருந்து மீள்விக்கப்பட்டது